நன்றாக விளையாடியும் வாய்ப்பு இல்லை; ருதுராஜை இந்திய அணி கழற்றி விட இதான் காரணம்.. அஸ்வின் பதிவு
This is the reason why the Indian team dropped Ruturaj Ashwin
2026 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், கழுத்து வலியால் தென்னாபிரிக்க தொடரில் விளையாடாமல் இருந்த சுப்மன் கில், தற்போது கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த மாற்றங்களின் காரணமாக, திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய ஒருநாள் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக, கடந்த தென்னாபிரிக்க தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதேசமயம், 2025/26 விஜய் ஹசாரே கோப்பையிலும் 38*, 124, 66 என தொடர்ச்சியாக ரன்கள் குவித்து சிறந்த ஃபார்மில் இருந்தார்.
இவ்வளவு சிறப்பாக விளையாடிய நிலையிலும், நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில்,“நன்றாக விளையாடியும் வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கெய்க்வாட்டை நினைத்து எவ்வளவு வருத்தப்பட்டாலும் போதாது. ஆனால் இந்திய அணியில் இடத்திற்கு மிகப்பெரிய போட்டி நிலவுவதால்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மீண்டும் சிறப்பாக விளையாடி ருதுராஜ் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அஸ்வின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“நீங்கள் எவ்வளவு வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. எழுந்திருங்கள், உடையை அணியுங்கள், உபகரணங்களை அணியுங்கள். ‘நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்பதை நிரூபியுங்கள். அணியில் இடத்தைத் தவற விடுவது கடினம். ஆனால் இந்திய அணியில் இடத்திற்கு அந்தளவுக்கு கடும் போட்டி உள்ளது – ருதுராஜ் கெய்க்வாட்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் பெரிய ரன்கள் குவித்து, சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், அதன்மூலம் இந்திய அணிக்கான தனது கம்பேக்கை உறுதி செய்யவும் ருதுராஜ் முயற்சி மேற்கொள்வார் என கிரிக்கெட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
English Summary
This is the reason why the Indian team dropped Ruturaj Ashwin