திமுக–காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் உரசல்? பிரச்சாரத்திற்கு ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்!குமுறும் தமிழக காங்கிரஸ் தலைகள்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் உள்ள ‘கெமிஸ்ட்ரி’ குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. தொகுதிப் பங்கீட்டில் தொடங்கிய முரண்பாடுகள், தற்போது களப்பணிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் கிருஸ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் அரசியல் சூழல், சமூக சமன்பாடு, வேட்பாளர்கள் மீதான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து பொறுப்பாளர்கள் விரிவாக விளக்கினர். சிலர், “திமுக என்ற பெரிய கூட்டணி நம்முடன் இருப்பதால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது” என்ற நம்பிக்கையையும் தெரிவித்தனர்.

ஆனால், மற்றொரு பகுதி நிர்வாகிகள் வெளிப்படையாகவே அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். “தொகுதிப் பங்கீடு மற்றும் சீட் விவகாரங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளால், திமுக நிர்வாகிகளிடையே எங்கள் மீது வெறுப்பு உருவாகியுள்ளது. களத்தில் முழுமையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. பல இடங்களில் வலியுறுத்திய பிறகே இணைந்து பணியாற்றுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், “ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால், அது அடிமட்ட திமுக தொண்டர்களுக்கு வலுவான அரசியல் செய்தியாக அமையும்” எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த முகுல் வாஸ்னிக், இந்த பிரச்சனைகள் மேலிடத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ராகுல் காந்திக்கும் அனைத்து விவரங்களும் தெரியும் என்றும் தெரிவித்தார்.

“முதல் கட்ட தேர்தல்கள் நடந்த மாநிலங்கள் மற்றும் பார்லிமெண்ட் அமர்வு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்த வாரத்தில் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சார கூட்டங்களும், ஸ்டாலினுடன் இணைந்து மேடை பகிரும் கூட்டமும் என இரண்டு வகை திட்டங்கள் தயாராக உள்ளன. திமுக தலைமையிடமிருந்து தேதி கிடைத்ததும் அவரது பயணம் உறுதி செய்யப்படும்” என அவர் கூறினார்.

மொத்தத்தில், கூட்டணிக்குள் உள்ள சிறிய விரிசல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ள இந்த சூழலில், ராகுல்–ஸ்டாலின் இணை பிரச்சாரம் அந்த இடைவெளியை நிரப்புமா என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will the friction continue in the DMK Congress alliance If Rahul doesnot come for the campaign it will be a big problem Tamil Nadu Congress leaders are angry


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->