‘விடியல் பயணம்’ திட்டம் பெண்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது...! - அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலில் பெருமை!
Vidiyal Payanam project given new hope women lives Minister Thangam proud Southern Government budget presentation
சட்டசபையில் 2026–2027 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின்போது, கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி மேற்கொண்ட வளர்ச்சி முயற்சிகள் மற்றும் மக்கள் நலச் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்து, அரசின் பணித்திறனை சுட்டிக்காட்டினார்.

“தமிழ்நாட்டில் வறுமையை முழுமையாக ஒழிக்க இறுதிக்கட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நீர்வளத்தை பெருக்கி, உணவு உற்பத்தியில் வரலாறு காணாத முன்னேற்றம் எட்டியுள்ளோம். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அரங்கில் போட்டியிடக்கூடிய இளைஞர்களை உருவாக்க கல்வி, திறன் மேம்பாட்டு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன,” என்றார்.மத்திய அரசின் சவால்களை சமாளித்தபடியே மாநில வளர்ச்சி பயணம் தொடர்கிறது என்றும், பன்னாட்டு தனித் தமிழ் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கீழடி, பொருநை போன்ற தொல்லியல் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பெரியார் ஈ.வி. ராமசாமி அவர்களின் நூல்கள் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ‘பேரறிவுச் சிலை’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தின் மக்கள் நலத் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளன என்றும், வரவு-செலவு திட்ட நிர்வாகத்தின் அடித்தளத்தை மு. கருணாநிதி உருவாக்கி வைத்தார் என்றும் கூறினார். தமிழ்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது எனவும் அவர் நினைவுபடுத்தினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் அரசின் முக்கிய முத்திரை முயற்சியாக விளங்குகிறது. ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 நேரடியாக செலுத்தப்பட்டதாகவும், ஒரே நாளில் ரூ.6,500 கோடி நிதி மக்களிடம் சென்றடைந்ததாகவும் தெரிவித்தார். பெண்கள் தற்சார்பு வாழ்க்கைக்காக சுயஉதவி குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன; ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம், கைம்பெண்களின் நலவாரியம், தாய்-மருத்துவ சேவைகளின் மேம்பாடு காரணமாக மகப்பேறு இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார். புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக ரூ.285 கோடி ஒதுக்கப்பட்டதுடன், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.630 கோடி செலவில் 10,469 வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.இவ்வாறு பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களை பட்டியலிட்டு தனது பட்ஜெட் உரையை அமைச்சர் நிறைவு செய்தார்.
English Summary
Vidiyal Payanam project given new hope women lives Minister Thangam proud Southern Government budget presentation