அப்படி போடு...! பொதுக்குழுவில் சிறப்பான சம்பவம் காத்திருக்கு - அடித்து களமிறங்கிய டிடிவி தினகரன்.!  - Seithipunal
Seithipunal


அமமுக பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு…. 

விடுதலைத் திருநாளான வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிற, அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கிய நம் இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட வாரியாக உங்களை எல்லாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருந்தாலும், உங்கள் அத்தனை பேரின் திருமுகங்களையும் ஒரு சேர, ஒரே இடத்தில் காணும் போது எனக்குள் எல்லையில்லாத உற்சாகமும், உத்வேகமும் உருவாகிவிடும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஏனெனில், சோதனை சூறாவளி சுழன்றடித்த போது பணத்திற்கோ, பதவிக்கோ விலை போகாமல் இந்த இயக்கத்தைக் கட்டி எழுப்பியது நீங்கள்தானே! தொடக்கத்தில் இருந்தே கல்லும் முள்ளும் நிறைந்த
போராட்டப் பாதையில் நாம் பயணித்தாலும் ஒரு கணமும் தளர்வடையாத நம்பிக்கையோடு இந்த இயக்கம் வீறுநடை போடுவதற்கு ஊற்றுக்கண் நீங்கள்தானே!

செயற்குழு – பொதுக்குழு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நமது சபதத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாகவே இதனைப் பார்க்கிறேன். 

கடந்தாண்டு கொரோனா பாதிப்பினால் இணையவழியில் பொதுக்குழுவை நடத்தினோம். இந்தாண்டு சென்னையில் அம்மா அவர்கள் பொதுக்குழுவை நடத்திய அதே இடத்தில், அம்மா அவர்கள் கற்றுத்தந்த ஒழுங்கோடும், கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் தமிழ் கூறும் நல்லுலகம் வியந்து பார்த்திடும் வகையில் சிறப்போடு நடத்தவிருக்கிறோம். 

“இயக்கம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்; இயக்கத்தின் இதயம் போன்ற பொதுக்குழு கூட்டம் இப்படிதான் நடக்க வேண்டும்” என்று பார் போற்றும் வகையில், முன்னுதாரணமான கூட்டமாக நம்முடைய பொதுக்குழு திகழப் போகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து வருகிற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வசதியாக மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் இக்கூட்டத்தை நடத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தோம்.

ஆனால், நம்முடைய நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்னையில், அம்மா அவர்கள் பொதுக்குழு நடத்திய இடத்தில், அம்மாவின் ஆசியை உண்மையாக பெற்றிருக்கும் நாம், நம்முடைய செயற்குழு – பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பம்தானே எப்போதும் எனது விருப்பமாக இருந்திருக்கிறது! மற்றபடி, சிலர் கூறுவதைப் போல நாம் யாருக்காவோ, எதற்காகவோ எல்லாம் சென்னை வானகரத்தில் இப்பொதுக்குழுவைக் கூட்டவில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

எனவே, மிகுந்த பொறுப்புணர்வோடு நீங்கள் ஒவ்வொருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே மழை கடுமையாக பெய்வதால், வாகனங்களில் வரும் போது பாதுகாப்பாக வாருங்கள். 

கூட்டம் நடைபெறும் நாள் சுதந்திர தினமாக இருப்பதால் காவல்துறையினர் கூடுதல் பணிச்சுமையோடு இருப்பார்கள். அதனால், அவர்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காமல் ஒத்துழைப்பாக
நடந்து கொள்ளுங்கள்.

நம்முடைய இயக்கத்தின் பொதுக்குழுவில் மிக முக்கியமான தீர்மானங்களை விவாதித்து நிறைவேற்ற இருக்கிறோம். அத்தீர்மானங்கள் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக இருக்கப் போகின்றன. தி.மு.க எனும் தீயசக்தியை வீழ்த்தி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக
அவை அமையப் போகின்றன.

எதை,எதையோ எதிர்பார்த்து வந்தவர்கள் எல்லாம் பச்சை கண்ட இடங்களுக்கு பறந்துவிட்டாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து, எவ்வித சலனமும் இன்றி சொக்கத்தங்கங்களாக இந்த இயக்கத்தில் பயணிக்கிற உங்கள் ஒவ்வொருவரின் கனவும் நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. உண்மையும், உறுதியும் நினைத்ததை வென்றுகாட்டாமல் விட்டதில்லை.

உங்களுக்கும் எனக்கும் உள்ள அந்த அசைக்க முடியாத நம்பிக்கையோடு
பொதுக்குழுவில் சந்திப்போம்! புது வெற்றிகளைப் படைக்க சபதமேற்போம்!!

இவ்வாறு அந்த கடிதத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran letter aug


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->