சென்னையில் ‘16க்கு 16’ இலக்கு! சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்!விஜயின் தவெகவிற்கு ‘செக்'!
The target of 16 for 16 in Chennai Sabareesan strategy to win all 16 seats in Chennai Check for Vijay victory
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை அரசியல் களம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ள சென்னையில், கடந்த 2021 தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக, இந்த முறை அதே சாதனையைத் தொடர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
ஆனால் இம்முறை தேர்தல் களம் மாறுபட்டுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலையில், அதன் முக்கிய தலைவர்கள் பலர் சென்னையில் களமிறங்கியுள்ளனர். பெரம்பூரில் விஜய், தியாகராயநகரில் ‘புஸ்சி’ ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, மயிலாப்பூரில் வெங்கடரமணன் உள்ளிட்டோர் போட்டியிடுவது தேர்தல் சமன்பாட்டில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதேபோல் ஆயிரம் விளக்கில் ஜே.சி.டி. பிரபாகர், கொளத்தூரில் வி.எஸ். பாபு, சைதாப்பேட்டையில் அருள் பிரகாசம், எழும்பூரில் ராஜ்மோகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது விட, கணிசமான அளவில் வாக்குகளைப் பிரிக்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்பதால் திமுக தரப்பில் எச்சரிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வாக்கு சிதறல் அதிமுகக்கு சாதகமாக மாறக்கூடும் என்ற கணிப்பும் நிலவுகிறது. இதனால் சென்னையில் ஒவ்வொரு தொகுதியையும் தனித்தனியாக அணுகும் வியூகத்தை திமுக கையாளுகிறது.
இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகனான சபரீசன் நேரடியாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை 16 தொகுதிகளிலும் அவர் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறார். வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் தனிப்பட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், வேட்பாளர் தேர்வில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தொகுதி பார்வையாளர்கள் போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டு, கட்சிப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதோடு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அடிப்படையில் வலுவான அமைப்பை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 லட்சம் இளைஞரணி தொண்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில், சென்னை ‘கோட்டை’யை மீண்டும் கைப்பற்ற திமுக முழு வீச்சில் களமிறங்கியுள்ள நிலையில், தவெக உருவாக்கும் புதிய அரசியல் சமன்பாடு தேர்தல் முடிவில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
English Summary
The target of 16 for 16 in Chennai Sabareesan strategy to win all 16 seats in Chennai Check for Vijay victory