தோல்விக்கான கள ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! திமுக மௌனத்திற்கு என்ன காரணம்?
Stalin issues an order What is the reason for the DMK silence
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமையால் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழு தனது அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தாலும், அதன் அடிப்படையில் இதுவரை எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படாதது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை மறுசீரமைக்கவே கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட வாரியாக அறிக்கை தயாரித்து தலைமைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதன் மீதான நடவடிக்கை தாமதமாகி வருவது திமுகவின் உண்மையான தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
"கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில்தான் கள ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் அதன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவில்லை என்றால், அது தற்காலிக அரசியல் அழுத்தத்தை சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு யுக்தியாகவே பார்க்கப்படும்" என்ற கருத்தும் கட்சிக்குள் எதிரொலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடவடிக்கை தாமதமாக இருப்பதற்குப் பின்னால் முக்கிய அரசியல் காரணம் ஒன்று இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பல நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், திமுகவின் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தவெக தலைமைக்கு தகவல் சென்றபோது, "திமுகவினரை உடனடியாக சேர்க்க வேண்டாம்; சரியான நேரத்தில் பார்க்கலாம்" என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த தகவல் திமுக தலைமையின் கவனத்துக்கும் சென்றதாக கூறப்படுகிறது.
இதன் பின்னரே கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுப்பதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏனெனில், கள ஆய்வு அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம். அப்படி நடந்தால், அவர்கள் கட்சியை விட்டு விலகி தவெகவில் இணைய வாய்ப்பு அதிகரிக்கும் என திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும், கட்சியில் இருந்து விலகிச் செல்லும் நிர்வாகிகள் திமுக தலைமையையும், குறிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிக்கும் சூழல் உருவாகலாம் என்ற அச்சமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கட்சிக்குள் பல்வேறு சவால்கள் நிலவி வரும் நிலையில், புதிய அதிருப்தி அலை உருவாகக் கூடாது என்பதற்காகவே நடவடிக்கைகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால், கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகள் முழுமையாக கைவிடப்படவில்லை என்றாலும், "சரியான அரசியல் சூழல் உருவாகும் வரை காத்திருக்க வேண்டும்" என்ற அணுகுமுறையையே திமுக தலைமை தற்போது பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.
English Summary
Stalin issues an order What is the reason for the DMK silence