ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. மீண்டும் 2021 தேர்தலில் திமுக போட்ட அதே பக்கா ஸ்கெட்ச்! கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்!
Stalin in active modeThe same sketch that DMK put up in the 2021 elections again A campaign weapon in hand
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநில அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பிரச்சினைகள், அரசியல் பிளவுகள் மற்றும் பல சர்ச்சைகள் ஆகியவை அந்தக் கட்சியின் பலத்தை குறைத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி திமுக தனது அரசியல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, வாக்காளர்களை அதிமுக அரசுக்கு எதிராகத் தயார் செய்ய முயன்றது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் 2017 ஆம் ஆண்டு திடீரென அவர் ராஜினாமா செய்தது அதிமுகவில் அதிகாரப் போட்டியை வெளிப்படுத்தியது. பின்னர் ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்த சம்பவம் “தர்மயுத்தம்” என்ற அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சசிகலா தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் மோதிய நிலையில் இறுதியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
இதற்கிடையில் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் அதிமுகவின் வலிமையை பாதித்தன. டிடிவி தினகரன் தனியாக அமமுக கட்சியை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றது அதிமுகக்கு அரசியல் சவாலாக மாறியது. அதிமுக ஆட்சியைத் தக்கவைக்க பல்வேறு அரசியல் சமரசங்கள் நடந்ததாகவும் அப்போது பேசப்பட்டது.
இந்த காலகட்டத்தில் பல சர்ச்சைகளும் அரசியல் விவாதங்களாக மாறின. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது பெரிய சர்ச்சையாகியது. அதேபோல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு மாநிலம் முழுவதும் பேசப்பட்ட விவகாரமாக மாறியது. பின்னர் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவலில் உயிரிழந்த சம்பவமும் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியது. இந்த சம்பவங்களை திமுக தனது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியமாக முன்வைத்தது.
இதற்கிடையில் கொரோனா தொற்று பரவியதால் மக்கள் வாழ்க்கையும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனத்தையும் திமுக தொடர்ந்து முன்வைத்தது. கறுப்புக்கொடி போராட்டம், சட்டமன்ற புறக்கணிப்பு, ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் அந்தக் கட்சி நடத்தியது.
இந்த அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில்தான் 2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக அரசு பலவீனமடைந்துள்ளதாகக் கூறிய திமுக, ஆட்சி மாற்றம் உறுதி என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்து இறுதியில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
English Summary
Stalin in active modeThe same sketch that DMK put up in the 2021 elections again A campaign weapon in hand