சாத்தூருக்கு மாறினாலும் நயினாரை விடவே கூடாது.. நயினாரை அவீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ யார்?
Even if you change to Sattur you should never leave Nainar Stalin sketch that brought down Nainar Who is the big head of the DMK who will step down
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி கணக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவரது பாரம்பரியமான திருநெல்வேலி தொகுதி இந்த முறை ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன், அந்த தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் களமிறங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் கூட்டணியில் சாத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், “சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நயினார் நாகேந்திரன் தொகுதி மாற்றம் குறித்து முடிவு செய்தார். அதன்பிறகு சாத்தூர் பகுதியில் களப்பணிகளை தொடங்கினார். அந்த தொகுதியில் சுமார் 23 சதவீதம் தேவர் சமூக வாக்குகள் உள்ளன. நயினார் நாகேந்திரனும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என அவர் கணித்துள்ளார்” என தெரிவித்துள்ளனர்.
இதனால் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் சாத்தூரில் களமிறங்கினால் அவரை தோற்கடிக்க திமுகவும் வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திருநெல்வேலி தொகுதியில் அவரை வீழ்த்த வேண்டும் என்று திமுக தலைமை திட்டமிட்டிருந்த நிலையில், அவர் சாத்தூருக்கு மாறினாலும் அதற்கேற்ற திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நயினார் நாகேந்திரனை எதிர்கொள்ள வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை களமிறக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
79 வயதான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர். தற்போது அவர் அருப்புக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். ஆனால் சாத்தூர் தொகுதி என்பது அவரது பழைய அரசியல் களம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் முதலில் அதிமுகவில் இருந்தபோது 1977, 1980, 1984, 1991 மற்றும் 1996 தேர்தல்களில் சாத்தூரில் போட்டியிட்டார். அதில் 1996 தேர்தலை தவிர மற்ற அனைத்திலும் வெற்றி பெற்றார். பின்னர் திமுகவில் இணைந்த அவர் 2001 மற்றும் 2006 தேர்தல்களிலும் சாத்தூரில் வெற்றி பெற்றார். அதன் பிறகு தான் அருப்புக்கோட்டை தொகுதிக்கு மாறினார்.
இதனால் சாத்தூர் தொகுதியின் சமூக மற்றும் அரசியல் கணக்குகள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு நன்கு தெரியும் என்பதால், நயினார் நாகேந்திரனை எதிர்கொள்ள அவரையே களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது மகன் ரமேஷுக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கேட்டு வருகிறார். எனவே சூழ்நிலையைப் பொறுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அல்லது அவரது மகன் ரமேஷ் ஆகியோரில் ஒருவர் நயினார் நாகேந்திரனை எதிர்த்து களமிறங்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனால், நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிட்டால் அந்த தொகுதி தென் தமிழக அரசியலில் மிகப்பெரிய ‘ஹாட் சீட்’ ஆக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
Even if you change to Sattur you should never leave Nainar Stalin sketch that brought down Nainar Who is the big head of the DMK who will step down