'தமிழக அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்று எழுத பெயிண்ட் தீர்ந்துவிட்டதா..? ஒப்பந்ததாரர் ஊழல் செய்து விட்டாரா? சீமான் கேள்வி..!
Seeman questioned what hesitation the Tamil Nadu government has in writing Tamil Nadu State Transport Corporation
தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? பெயிண்ட் தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் பெயிண்ட் ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழகத்தில் இயங்கும் அரசுப் பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன்? இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். ஆரம்ப காலங்களில் தமிழக அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பஸ்களில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழகம் பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

தமிழக அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? பெயிண்ட் தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் பெயிண்ட் ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழகம் என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா?
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்து கழகப் பஸ்களில் தமிழகம் என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன்? யாருடைய உத்தரவின் பேரில் 'தமிழகம்' பெயர் தவிர்க்கப்படுகிறது?

தமிழகம் என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதல்வர் பொறுப்பேற்பாரா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் திமுக அரசு தமிழகம் மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
தமிழகம் என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு. இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்தார்.
கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பஸ்களில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழகம் என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழகம் என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் 'தமிழகம்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழகம் நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது தற்புகழ்ச்சிக்கானதே தவிர, தமிழகம் என்ற பெயரின் மீதான பற்றுதலினால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழக அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழக அரசுப்பஸ்கள் அனைத்திலும் 'தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம்' என்று முழுமையாக எழுத வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், 'தமிழகம்' பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.'' என்று சீமான் கூறியுள்ளார்.
English Summary
Seeman questioned what hesitation the Tamil Nadu government has in writing Tamil Nadu State Transport Corporation