''40 ஆண்டாக எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூட போகிறது'';முதல்வர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டம் குறித்து பிரேமலதா கருத்து..!
Premalathas comments regarding the crowds gathering for Chief Minister Vijay
''முதல்வர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பற்றி எங்களிடம் கேட்கக் கூடாது. 40 ஆண்டாக எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூட போகிறது.'' என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறியதாவது;
மின் கட்டண உயர்வு, மின்சார தடை குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்ப்பை தெரிவிக்க முடியும். அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக முழுவதும் மின்வெட்டு மின்கட்டண உயர்வு ஒருபுறம், மறுபுறம் ஒரு யூனிட் வெளியில் இருந்து ரூ.30-க்கு வாங்கினால் நிச்சயம் மக்களை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போதைப் பொருள் கடத்தலில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பற்றி அக்கட்சி தான் பதிலளிக்க வேண்டும் என்றும், எங்களை பொறுத்த அளவில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கேப்டனின் கனவும் அதுதான் என்று பேசியுள்ளார்.
பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்தபோது, காவிரி விவகாரம் குறித்து பேசவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டிஉள்ள நிலையில் அதற்கு, அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக எம்எல்ஏக்களை தவெக குதிரை பேரம் பேசி வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டுள்ளது. முற்பகல் செய்தது, பிற்பகலில் விளையும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என விஜயகாந்த் சொல்வார்.
வாழ்க்கை ஒரு வட்டம். நிச்சயமாக நாம் விதை விதைத்தால் விதை அறுப்போம், வினை விதைத்தால் வினைதான் அறுப்போம். குதிரை பேரம் பற்றி சட்டப் பேரவையில் முதலில் பேசியது நான் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெம் வீரமணி விவகாரத்தை நினைக்கும்போது, தமிழகத்தில் இப்படியொரு நிகழ்வா என பெரிய அதிர்ச்சியாக உள்ளதாகவும், யார் தவறு செய்தாலும் தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விலைவாசி உயர்வை அரசு தடுக்க வேண்டும் என்றும், முதல்வர் காவல் துறையை கையில் வைத்திருந்தும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பட்டப்பகலில் படுகொலை, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் ஜெயிப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது என்றும், முதல்வர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பற்றி எங்களிடம் கேட்கக் கூடாது. 40 ஆண்டாக எங்களுக்கு கூடாத கூட்டமா தவெகவுக்கு கூட போகிறது. மதுரையில்தான் மாநாடு நடத்தி உலக சரித்திரம் படைத்தார் விஜயகாந்த். மக்கள் கூட்டத்தைப் பற்றி தேமுதிகவிடம் கேட்காதீர்கள், எங்களுக்கு பழக்கப்பட்டது என்று செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியுள்ளார்.
English Summary
Premalathas comments regarding the crowds gathering for Chief Minister Vijay