விஜய் கட்சிக்கு ப.சிதம்பரம் ஆதரவா...? 'த.வெ.க-வுக்கு அரசு அவகாசம் கொடுக்க வேண்டும்'...! - காங்கிரஸ் மூத்த தலைவரின் திடீர் அதிரடி கருத்து...!
P Chidambaram supports Vijay party Government should give time TVK Senior Congress leader sudden action comment
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
வெறும் இரண்டு ஆண்டுகளில் ஒரு அரசியல் இயக்கம் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் சாதனை என அவர் பாராட்டினார்.மேலும், பலரது கணிப்புகளையும் மீறி சுமார் 35 சதவீத வாக்குகளை பெற்று தவெக ஆட்சியை அமைத்துள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு வாக்கையாவது தவெக பெற்றிருப்பது அதன் மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்துவதாக தெரிவித்த அவர், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவது தொடர்பாக தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என அவர் கூறினார். மேகேதாட்டு உள்ளிட்ட தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சினைகளில் மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில உரிமைகள் ஆகிய அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாதவரை ஆதரவு வழங்குவதில் தவறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். இதே கருத்தையே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் முன்வைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழக மக்கள் தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் தேர்தலை விரும்பவில்லை என்பதே தனது அரசியல் மதிப்பீடு என தெரிவித்த அவர், தேவையற்ற அரசியல் நெருக்கடிகள் உருவானால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பின்வாசல் வழியாக பாஜக அதிகார மையத்திற்கு வரக்கூடும் என்ற எச்சரிக்கையையும் முன்வைத்தார்.
திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதுபற்றி தனக்கு எந்த தகவலும் தெரியாது என ப.சிதம்பரம் பதிலளித்தார்.“எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? அது எனது அறியாமையாக இருக்கலாம்; அல்லது உங்கள் தகவல் ஆழமாக இருக்கலாம்” என்று நகைச்சுவையுடன் அவர் பதிலளித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் தற்போது தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 31 அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கும் நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், 101 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்திருப்பதால், அவர்களுக்கு தங்களை நிரூபிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், மக்கள் அளித்துள்ள நம்பிக்கையை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
P Chidambaram supports Vijay party Government should give time TVK Senior Congress leader sudden action comment