7 வயது சிறுமியும், 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மனிதப் பேரவலத்தின் உச்சம் - சீமான் கடும் கண்டனம்!
NTK Seeman Condemn to DMK MK Stalin Govt
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடுஞ்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் உலக மகளிர் நாளில் நிகழ்ந்துள்ள இக்கொடுமைகள் வன்மையான கண்டனதுக்குரியது.
குமாரபாளையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு சிறுமியின் நிலை குறித்து வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயல்வது வெட்கக்கேடானது. திமுக அரசு குற்றத்தை மறைப்பதில் காட்டும் ஆர்வத்தையும், அக்கறையையும் தடுப்பதில் காட்டியிருந்தால் சட்டம் ஒழுங்கு என்றைக்கோ சீரடைந்திருக்கும். ஏதும் அறியாத சிறுமிக்கு நிகழ்ந்துள்ள இக்கொடுமை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலமாகும். பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் பெற்றோரின் கதறல் ஒலி
நெஞ்சைப் பிளக்கிறது.
தங்களின் அன்பு குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி நெஞ்சம் குமுறும் பெற்றோர்க்கு என்ன ஆறுதல் கூறி தேற்ற முடியும்? அப்பிஞ்சு நெஞ்சின் உள்ளத்தில் உண்டான கொடுங்காயம் வாழ்நாள் முழுவதும் வடுவாக நின்று வாட்டுமே? யார் அதற்கு மருந்திடுவது? வருங்காலத் தலைமுறைகளின் நெஞ்சத்தில் எதை விதைக்கின்றோம்? எவற்றை நாம் கற்பிக்கின்றோம்? யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? திமுக அரசு பொறுப்பேற்குமா? திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா?
அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியரில், 70 வயது கணவரை கொன்று அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள துயர நிகழ்வு மற்றுமொரு கொடுமையாகும். குற்றவாளிகளை இதுவரை பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறுவதுதான் நிகழ்ந்த வன்கொடுமையை விடவும் மிகப்பெரிய வன்கொடுமை! வீட்டில் இருக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு இல்லை, வீட்டிற்கு வெளியே விளையாடும் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லையென்பது தமிழ்நாட்டில்
சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
திமுக ஆட்சியில் 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முகாம் தலைவராக இருந்த சகோதரர் சிவகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல்லாவரத்தை அடுத்த திரிசூலத்தில் ஆறுமுகம், சதீஷ் ஆகிய இரு இளைஞர்கள் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதெல்லாம் வெட்கக்கேடானது. போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான், நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாகும்.
ஆகவே, ஊத்தங்கரையில் கணவரை கொன்று 60 வயது மூதாட்டியையும், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை தர வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்தேறாமல் தடுக்க போதைப்பொருள் மற்றும் மது விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
வன்கொடுமைக்கு இலக்காகியுள்ள சிறுமி மற்றும் மூதாட்டிக்கு உரிய மருத்துவம் அளிப்பதுடன், உளவியல் ரீதியாக நம்பிக்கையுடன் மீண்டுவர தேற்றுவதும் அரசின் கடமையாகும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 7 வயது மகளும், 60 வயது தாயும் விரைந்து நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to DMK MK Stalin Govt