தமிழக அரசியலில் புதிய செக்: அதிமுகவிடம் 50 தொகுதிகள் பட்டியலுடன் பாஜக அழுத்தம்...!
new twist Tamil Nadu politics BJP pressures AIADMK list 50 constituencies
2021-ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய பாஜக, வரவிருக்கும் தேர்தலிலும் அதே கூட்டணியைத் தொடர முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை அதிமுகவிடம் 50 தொகுதிகளை கோரி கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக பேசப்படுகிறது.

இந்த பின்னணியில், கடந்த 4-ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டைக்கு வந்தபோது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்திக்கவில்லை. அதற்கு பதிலாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரண்டு முறை அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த சந்திப்பின்போது, பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் 50 தொகுதிகள் அவசியம் என்றும், அவை அனைத்தும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக, எஸ்.பி.வேலுமணியிடம் தொகுதிகளின் பட்டியலே வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமித்ஷா டெல்லி புறப்பட்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து, கூட்டணியில் பாமக இணைவதை உறுதி செய்தார்.
அதே நாளின் மாலையே, அரசியல் வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்பட்டு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்திற்கு வந்தபோது சந்திக்காத அமித்ஷாவை, இரண்டு நாளுக்குள் டெல்லியில் சென்று சந்தித்தது ஏன்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற அந்த சந்திப்பில், அமித்ஷா கறாரான நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என்றும், எந்த தொகுதிகள் என்பதை பாஜக தலைமையே முடிவு செய்துள்ளதாகவும், அதிமுக ஒதுக்கும் பலமில்லாத தொகுதிகளை ஏற்க முடியாது என்றும் அவர் தெளிவாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த 50 தொகுதிகளின் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வழங்கியதாக சொல்லப்படுகிறது.இந்த நடவடிக்கையின் மூலம், அதிமுகவுக்கு பாஜக ஒரு வகையில் “செக்” வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாஜக கோரும் 50 தொகுதிகளில் தற்போது திமுக வசம் 30 தொகுதிகளும், அதிமுக கையில் 5 தொகுதிகளும், காங்கிரஸ் பிடியில் 6 தொகுதிகளும், பாஜக வசம் 4 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடம் தலா ஒரு தொகுதியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அதிமுகவிடம் கோருவதாக கூறப்படும் 50 தொகுதிகள்:
திருத்தணி, காரைக்குடி, திருச்செந்தூர், சிவகங்கை, மதுரை (வடக்கு),திருநெல்வேலி, மதுரை (மத்தி), நாகர்கோவில், திருப்பரங்குன்றம், குளச்சல், தாராபுரம், திட்டக்குடி, தாம்பரம், திருப்போரூர், உத்திரமேரூர், உதகமண்டலம், ஈரோடு (கிழக்கு), ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், மொடக்குறிச்சி, விருத்தாசலம், திருப்பூர் (வடக்கு), சிதம்பரம், திருப்பூர் (தெற்கு), மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், திருவையாறு, திருச்சுழி, திருமயம்,காஞ்சீபுரம், கோவை (தெற்கு), ஆவடி, தளி, சிங்காநல்லூர், அம்பத்தூர், திருவண்ணாமலை, பழனி, துறைமுகம், திருக்கோயிலூர், அரவக்குறிச்சி, ஆயிரம் விளக்கு,திருச்சி (கிழக்கு), விருதுநகர், ராமநாதபுரம், கோவில்பட்டி, ராஜபாளையம், விளவங்கோடு.
English Summary
new twist Tamil Nadu politics BJP pressures AIADMK list 50 constituencies