''வைகை நதி குறித்த ஆளுநரின் கருத்து, நதி நீர் ஆதாரங்கள் மீதான அவரது ஆழமான அக்கறையைக் காட்டுகிறது''; நயினார் நாகேந்திரன் புகழாரம்..! - Seithipunal
Seithipunal


''வைகை ஆற்றின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அதனை சுத்தம் செய்ய யாரும் முன் வராவிட்டால் ஆளுநர் மாளிகை நேரடியாகக் களமிறங்கும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது, நதி நீர் ஆதாரங்கள் மீதான அவரது ஆழமான அக்கறையைக் காட்டுகிறது'' என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''மதுரை வைகை நதியைப் பாதுகாக்கவும், அதன் தூய்மையைப் பேணவும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள கருத்துகள் மிகவும் வரவேற்கத்தக்கவை.

வைகை ஆற்றின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அதனை சுத்தம் செய்ய யாரும் முன் வராவிட்டால் ஆளுநர் மாளிகை நேரடியாகக் களமிறங்கும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது, நதி நீர் ஆதாரங்கள் மீதான அவரது ஆழமான அக்கறையைக் காட்டுகிறது.

ஆளுநரின் இந்த மக்கள் நலன் சார்ந்த கருத்தைத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

அதேவேளையில், ஆளுநரின் மக்கள் நலக் கருத்துக்கு அரசியல் வண்ணம் பூச முயலும் தமிழக காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர், தவெக அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் விமர்சனங்கள் தேவையற்றவை.

நதிப் பாதுகாப்புப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதை விடுத்து, அதனை ஆளுநரின் அதிகார வரம்பு மீறலாகச் சித்தரிப்பது ஏற்புடையதல்ல. அரசு இயந்திரம் தன் கடமையிலிருந்து தொய்வடையும்போது, மாநிலத்தின் முதன்மைக் குடிமகன் என்ற முறையில் ஆளுநர் கவலை தெரிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

கடந்த கால தி.மு.க ஆட்சியைப் போலவே, தற்போதைய தவெக அரசும் விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடர்ந்து தவறி வருகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நீர் மேலாண்மைத் திட்டங்களிலோ அல்லது நதிகள் பாதுகாப்பிலோ தவெக அரசு காட்டும் அலட்சியப்போக்கு கவலையளிக்கிறது.

குறிப்பாக, தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தனது தேர்தல் அறிக்கையில் பெரிய அளவில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் தவெக அரசு மவுனம் காத்து வருகிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளுக்கும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை விவசாயிகள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்த நதி மீட்புப் பிரச்சினை வைகையோடு மட்டும் நின்று விடுவதில்லை. தமிழகம் முழுவதும் உள்ள காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் போதிய பராமரிப்பின்றி, தூர்வாரப்படாமல் தவிக்கின்றன.

எனவே, மாநில அரசு உடனடியாக விழித்துக்கொண்டு, தமிழகத்தின் அனைத்து நதிகளையும் திட்டமிட்ட முறையில் தூர்வாரி, தூய்மைப்படுத்தி மீட்டெடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத் தலைமுறையினரின் நல்வாழ்வையும் காக்கும் வகையில் நதிகள் பாதுகாப்பைத் தனது முதன்மைப் பணியாகக் கருதி தவெக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendran praised the Governor comment on the Vaigai River saying it shows his deep concern for river water resources


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->