'திமுக ஆட்சியில் பெருகிவரும் சமூகவிரோதிகள்': துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழரை நிறுத்திய மோடிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!
Nayinar Nagendran demands arrest of those who tore down a banner thanking Modi for fielding a Tamil as the Vice Presidential candidate
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தமிழரை நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி காயல்பட்டினத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரை மர்ம நபர்கள் கிழித்தெறிந்துள்ளனர். இவர்களை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக அவர்களை கைது செய்யுமாறு காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம் என தூத்துக்குடி மாவட்டம் தெற்கு (BJP THOOTHUKUDI SOUTH) பாஜவினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது போன்ற சமூக விரோத சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, தண்டனை வழங்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழால் இருக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
திமுக ஆட்சியில் பெருகிவரும் சமூகவிரோதிகள்!
தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமான ஐயா திரு. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக, தேசத்தின் மதிப்புமிக்க உயர் பொறுப்பான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஒரு தமிழரை முன்மொழிந்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, தூத்துக்குடி காயல்பட்டினத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை மர்மநபர்கள் சிலர் கிழித்து நாசப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், பதாகைகள் கிழிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒருவேளை தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆளும் அரசே இதுபோன்ற சமூகவிரோத செயல்களைச் செய்யச் சொல்லி கூலிப்படைகளை ஏவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற சமூகவிரோத சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழால் இருக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nayinar Nagendran demands arrest of those who tore down a banner thanking Modi for fielding a Tamil as the Vice Presidential candidate