தேனியை விட்டு பழனியில் போட்டியிட ஓபிஎஸ் திட்டமா? ஓபிஎஸ் Vs அண்ணாமலை போட்டி? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ளவருமான ஓ.பன்னீர்செல்வம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சொந்த மாவட்டமான தேனியை விட்டு, இந்த முறை திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் சூழல் தற்போது எதிர்பாராத திருப்பங்களால் பரபரப்பாக உள்ளது. குறிப்பாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததும், அதைவிட பெரிய அதிர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்ததும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக இருந்து மூன்று முறை தமிழக முதலமைச்சராகவும், ஒருமுறை துணை முதலமைச்சராகவும் பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகியே இருந்தார். மீண்டும் அதிமுகவில் சேர பல முயற்சிகள் மேற்கொண்டாலும் அவை பலனளிக்கவில்லை.

பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். தொடர்ந்து தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அதனை எல்லாம் மீறி திமுகவில் இணைந்தது அரசியல் ரீதியாக பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.

இதன் பின்னர் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக தரப்பில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும், அவர் வெற்றி பெற்றால் அமைச்சர் அல்லது சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் அவர் தனது சொந்த பகுதிகளான பெரியகுளம் அல்லது போடி தொகுதிகளில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர் பழனி சட்டமன்றத் தொகுதியை தேர்வு செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவினர் ஓபிஎஸ்க்கு எதிராக உள்ளனர். அதேபோல் திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக தலைவர் தங்க தமிழ்ச்செல்வனும் அரசியல் ரீதியாக எதிராக செயல்படக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தனது சொந்த மாவட்டத்தில் உள்கட்சிப் பிரச்சனைகள் ஏற்பட்டு வெற்றி பாதிக்கப்படக்கூடும் என்பதால் தொகுதி மாற்றத்தை ஓபிஎஸ் பரிசீலித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். முன்பு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட காலத்தில் கொடைக்கானல் மலையகப் பகுதிகளில் இருந்து அவருக்கு கணிசமான ஆதரவு கிடைத்ததாகவும், அந்த பழைய தொடர்புகளை கருத்தில் கொண்டு பழனி தொகுதியை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பழனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிற்கக்கூடியவர் ஓபிஎஸ்க்கு நெருக்கமானவர் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக – பாஜக கூட்டணியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பழனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால் பழனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணாமலை இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உருவாகலாம்.

அந்த நிலை ஏற்பட்டால், 2026 தேர்தலில் பழனி சட்டமன்றத் தொகுதி மாநில அளவில் கவனம் ஈர்க்கும் ‘ஸ்டார்’ தொகுதியாக மாறும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is OPS planning to contest from Theni to Palani OPS vs Annamalai contest There is excitement in political circles


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->