“போனால் போகட்டும் போடா”... தவெக மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தியா? விலகல் குறித்து பரபரக்கும் தகவல்கள்! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் மீதும், அவரைச் சுற்றியுள்ள அதிகார மையங்கள் மீதும் நாஞ்சில் சம்பத் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட சில கருத்துகளைத் தொடர்ந்து, தவெக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விரைவில் விலகப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தற்போதைய நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவது குறித்து எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், விஜய் மீது நாஞ்சில் சம்பத்துக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பது உண்மை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்கு சில முக்கியமான பின்னணிகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலின்போது தென்மாவட்டங்களில் தனக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அவர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக விஜய்யை சந்தித்தபோது, “தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நாம் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும்” என விஜய் கூறியதாக நாஞ்சில் சம்பத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வார்த்தைகள் அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததாகவும் தெரிகிறது.

அதன்பின்னர் தவெக ஆட்சியைப் பிடித்து, விஜய் முதல்வரான நிலையில், பல்வேறு வாரியங்கள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என நாஞ்சில் சம்பத் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. தனது விருப்பம் குறித்து முதல்வரின் ஆலோசகர்களில் முக்கியமான ஒருவரிடமும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், நீண்ட நாட்களாகியும் அந்த பதவி தொடர்பாக எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்தப் பதவிக்கு நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியை முதல்வர் விஜய் தேர்வு செய்திருப்பதாக கடந்த வாரம் தகவல் அறிந்ததும் நாஞ்சில் சம்பத் அதிர்ச்சியடைந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து விஜய்யிடமும், அவரது ஆலோசகரிடமும் பேச அவர் முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகவே, “போனால் போகட்டும் போடா...” என்ற பொருளில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக அவரது தரப்பில் பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, கட்சி சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைப்பதில்லை என்ற வருத்தமும் நாஞ்சில் சம்பத்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் தன்னை கட்சி சார்பில் அழைக்கவில்லை என்ற அதிருப்தி அவரிடம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத்திடம் பேசி சமாதானப்படுத்தினால் அவர் தொடர்ந்து கட்சியில் நீடிப்பார் என்றும், அது நடைபெறாத பட்சத்தில் தவெகவிலிருந்து விலகுவது குறித்து அவர் முடிவெடுக்கக்கூடும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், நாஞ்சில் சம்பத்தின் சமூக வலைதளப் பதிவுகள் தவெக வட்டாரத்தில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் உண்மையிலேயே கட்சியிலிருந்து விலகப் போகிறாரா அல்லது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்படுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Nanjil Sampath dissatisfied with TVK


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->