'அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா'...? - எலான் மஸ்க் எழுப்பிய சர்ச்சைக் கேள்விக்கு கமல்ஹாசன் காட்டம்...! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவது தொடர்பாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க்கின் விமர்சனங்களுக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைய சேவைகளை வழங்கி வருகின்றன.

இருப்பினும், இணைய வசதி போதிய அளவில் சென்றடையாத கிராமப்புற பகுதிகளுக்கும் இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் செயற்கைக்கோள் வழியிலான இணைய சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமும் இந்தியாவில் தனது சேவையை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் 20 நுழைவாயில் தளங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டெனாக்களை நிறுவியுள்ளதாகவும், இந்திய பயனர்களின் தரவுகளை நாட்டிற்குள்ளேயே பாதுகாக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் செயற்கைக்கோள் வழியிலான இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனமும் பார்தி ஏர்டெல் குழுமமும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

இந்த நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவையை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார்.தனது சமூக வலைதளப் பதிவில், ஸ்டார்லிங்க் நிறுவனம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதாகவும், இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடந்த 5 ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்ட எலான் மஸ்க், "அப்படியிருந்தும் இன்னும் உரிமம் வழங்கப்படாதது ஏன்? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்தது. உரிமம் வழங்கும் நடைமுறை நியாயமானதாகவும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கமல்ஹாசன் கடும் பதிலடி
இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கின் கருத்துக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். எந்தவொரு கோடீஸ்வரரும், அவர் இந்தியராக இருந்தாலும் அமெரிக்கராக இருந்தாலும், ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவராக இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும், ஒவ்வொரு நாடும் தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்தே முடிவுகளை எடுக்கும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தொழில்துறையை பாதுகாத்துக்கொண்டே, மற்ற நாடுகளுக்கு தாராள சந்தை குறித்து அறிவுரை வழங்குவது முரண்பாடானது என்றும் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.அமெரிக்கா தனது உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்க சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவி நிறுவனத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை குறிப்பிட்ட கமல்ஹாசன், ஒரு நாடு தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும்போது மட்டும் மற்றொரு நாட்டிடம் சமமான வாய்ப்பை கோர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பலம், பலவீனம் உள்ளிட்ட விவகாரங்களை இந்தியர்களே நாட்டுக்குள் விவாதித்து, கேள்வி எழுப்பி, தேவையான மாற்றங்களை கொண்டு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்."இந்தியா ஒரு ஜனநாயக நாடு; காலனி அல்ல. உலக நாடுகளை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களாகிய நாமே தீர்மானிப்போம்" என்ற கருத்தை முன்வைத்து கமல்ஹாசன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Ambani real leader of India Kamal Haasan reacts to Elon Musk controversial question


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->