“அதிருப்தியில் இருப்பதால் தான் அந்த பதிவு போட்டேன்” – தவெக மீது வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த நாஞ்சில் சம்பத்!
I made that post because I am dissatisfied Nanjil Sampath openly expresses dissatisfaction with TVK
தவெகவின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும், இதன் காரணமாகவே சமூக வலைதளத்தில் தான் வெளியிட்ட பதிவை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.
நாஞ்சில் சம்பத் கட்சியில் இணைந்தபோது, அவரது பேச்சாற்றலை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் கட்சிக்காக புதிய பேச்சாளர்களை உருவாக்கும் பணியில் அவரை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தவெக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்சியின் முக்கியமான பிரசார முகமாக அவர் இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக சார்பில் வெளியிடப்பட்ட பேச்சாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில், நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா... என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது” என பதிவிட்டிருந்தார்.
நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவு தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில், தவெக கூட்டணியில் மதிமுக இணைந்ததால் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையின் காரணமாகவே அவர் அந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறினர்.
இந்நிலையில், தனது பதிவுக்கான காரணத்தை நாஞ்சில் சம்பத்தே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அதிருப்தியில் இருப்பதால் தான் அந்தப் பதிவு போட்டேன். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு யாரும் என்னை அழைக்கவில்லை. நானும் போகவில்லை. கட்சியில் இருக்கும் ஒரே பேச்சாளர் நான் தான். அது ஊருக்கே தெரியும் போது, தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா?” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் தவெக மீது தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக உறுதி செய்துள்ளார். குறிப்பாக, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் தனக்கு தேர்தல் பிரச்சாரத்தில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருப்பது கட்சிக்குள் கவனத்தை பெற்றுள்ளது.
இதற்கிடையே, தவெக கூட்டணியில் மதிமுக இணைந்திருப்பதும் இந்த விவகாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தவெகவுக்கு ஆதரவாக வைகோ பேசத் தொடங்கிய காலகட்டத்திலேயே, வைகோவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது மதிமுக, தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், வைகோ மற்றும் துரை வைகோ தரப்பின் வேண்டுகோளின் காரணமாக நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியிலும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற பேச்சுகளும் தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளன. எனினும், இதுதொடர்பான காரணங்கள் குறித்து கட்சி தரப்பில் தெளிவான விளக்கம் வெளியாகவில்லை.
நாஞ்சில் சம்பத் தற்போது தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில், அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்துவார்களா அல்லது இந்த விவகாரம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு வழிவகுக்குமா என்பது தவெக வட்டாரத்தில் கவனிக்கப்படும் விஷயமாகியுள்ளது.
English Summary
I made that post because I am dissatisfied Nanjil Sampath openly expresses dissatisfaction with TVK