முதல்வர் விஜய்க்கு 6 மாசம் டைம் கொடுங்க...! - ஆளுநரை சாடி, விஜய்க்கு ஆதரவாக வைகோ அதிரடிப் பேட்டி...!
Give Chief Minister Vijay 6 months time Vaiko gives dramatic interview support Vijay criticizing Governor
தஞ்சாவூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், நாளை சென்னையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வருகிற 5-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்த வைகோ, இது திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை சோதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயலாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஆளுநர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் ம.தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அவரை அவசரமாக விமர்சிப்பது பொருத்தமல்ல என்றும் வைகோ கூறினார்.
ஆட்சிப் பொறுப்பில் முழுமையாக ஈடுபட்ட பிறகே மாநில நிதிநிலை மற்றும் நிர்வாக சவால்களின் தீவிரம் வெளிப்படுவதாக குறிப்பிட்ட அவர், குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடைபெறவுள்ள நிர்வாகக்குழு கூட்டத்தில் ம.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போது தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்வதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக கூறிய வைகோ, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கொலை செய்யும் நபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என்றார். மேலும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் வலையமைப்பை முற்றிலுமாக ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்த வைகோ, பல ஆண்டுகளாக ஊடகங்களை நேரடியாக சந்திப்பதை அவர் தவிர்த்து வருவதாக கூறினார். அதேவேளையில், முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை தொடர்ந்து சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்தார்.
English Summary
Give Chief Minister Vijay 6 months time Vaiko gives dramatic interview support Vijay criticizing Governor