தவெகவில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர்; தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ்..?
Former MLA JCD Prabhakar has joined the TVK
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தரப்பு கூறி வருக்கின்றது. அதிமுக தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்னும் எந்த எந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சூழலில் அமமுக, ஓபிஎஸ் தரப்பு, ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைவார்களா என எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதேசமயம் புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தவெகவில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி வைக்க ஏழு கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், வேற்று கட்சியினரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து அணைத்து கட்சிகளுக்கும் சப்ரைஸ் கொடுத்து வருகின்றனர். அதன்படி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த மாதம் தவெகவில் இணைந்தார். அப்போது அவர், இன்னும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஜேசிடி பிரபாகர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதன்படி, ஜேசிடி பிரபாகரும் நீக்கப்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து விலகிய ஜேசிடி பிரபாகர் இன்று விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்துள்ளார். இது அரசியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்து அவருக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் மாற்றுக் கட்சிக்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுகவும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ள மறுப்பதால் அவர் தனித்து விடப்பட்டுள்ளார். அவரின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
Former MLA JCD Prabhakar has joined the TVK