'மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும்'; இபிஎஸ் வலியுறுத்தல்..!
EPS insists on the immediate release of Nainar Nagendran and others
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா , ஹிந்து பக்தர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொது செயலாளர் மற்றும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:
''சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, தமிழக பாஜ தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட, பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு?

மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சினையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.
உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது,
மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
EPS insists on the immediate release of Nainar Nagendran and others