விஸ்வரூபம் எடுத்த துரைமுருகன்! வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


"விவரமின்றி பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதை விடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விவரத்தோடு பேச வேண்டும்" என திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். 

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபகாலமாக ஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில் உரையாற்றினாலும், தி.மு.க. ஆட்சியில் காவேரி - முல்லைப் பெரியார் பிரச்சினையில் என்ன செய்தது என்று கேட்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் எத்தனையோ முறை முதலமைச்சரும் - மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோதெல்லாம், நாங்கள் பலமுறை விவரமாக கூறி எங்களுக்கே அலுத்துபோய்விட்டது. அவர்களுக்கும் கேட்டு, கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும்.

ஆனாலும், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், விழாக்கள் தோறும் இதே கேள்வியை கேட்டு வருகிறார். அப்படித்தான் நேற்று சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதும், “தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக அதிக காலம் இருந்தவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன். காவேரி - முல்லைப் பெரியார் - பாலாறு பிரச்சினைகளுககு எந்த தீர்வும் காணாதவர்” என்று பேசியிருக்கிறார். அதாவது, கலைஞர் அரசு இந்தப் பிரச்சினைகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.

காவேரி பிரச்சினை என்றால் என்ன?

காவேரியாற்றில் வரும் தண்ணீரை கர்நாடகமும் - தமிழகமும் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்பது குறித்து 1924ஆம் ஆண்டு, இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. காலப்போக்கில் கர்நாடக அரசு, ஒப்பந்தத்தை மீறி நடக்க ஆரம்பித்தது. தமிழகத்துக்கு அதனால் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சினைக்கோர் தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்தான். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக இதைக் கொண்டு வந்ததும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

பிரச்சினையை சுமூகமாக தீர்க்க பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைஞர் அவர்கள்தான்.

காவேரியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கண்டுபிடிக்க ‘உண்மை கண்டறியும் குழு’வை கொண்டு வந்தவரும் கலைஞர்தான்.

முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் கூறுவதைப் போல, முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள், என்னை பொதுப்பணித் துறை அமைச்சராக நியமித்திருந்த அந்த காலகட்டத்தில்;

* பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

* வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

* அந்த நடுவர் மன்றத்தில் ஓர் இடைக்கால தீர்வு கேட்கப்பட்டபோது, நடுவர் மன்றத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கிட அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் கூறியது.

* அந்தத் தீர்ப்பை எதிர்த்து, நடுவர் மன்றத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டா? என்ற கேள்வியை உச்ச நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து, இடைக்கால தீர்ப்பு வழங்க நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பை பெற்றது.

* அந்தத் தீர்ப்பை காட்டி, நடுவர் மன்றத்தில், இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு, தமிழகத்திலுள்ள மேட்டூருக்கு தர வேண்டும் என்றும் தீர்ப்பை பெற்றதும்;

* தொடர்ந்து வழக்கை நடத்திக் காவேரி நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பை பெற்றதும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

அதுமட்டுமல்லாமல், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தபோது, அடுத்து என்ன மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதற்கு அன்றைய முதல்வர் கலைஞர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வம், வழக்கறிஞர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசப்பட்ட முக்கிய கருத்து;

* ஜூன் மாதம் தொடங்கி, மே மாதம் முடிய 192 டி.எம்.சி. நீரைத்தான் நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.

* இந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளகூடியது அல்ல

* 192 டி.எம்.சி. போதாது. மேலும், 60 டி.எம்.சி. தண்ணீரை பெற வேண்டும்.

* சேத்தியார்தோப்பு - காவேரி பாசன வரம்பிற்குள் தொடர்ந்து தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற பல்வேறு ஷரத்துகளை உள்ளடக்கி “நடுவர் மன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நடுவர் மன்றத்தை வேண்டிக் கொள்வதோடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்” என ஏகமனதாக அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், நாங்கள் ஆட்சியில் இருந்து இறங்கினோம். அடுத்து அ.தி.மு.க. ஆட்சி வந்தது. அந்த காலகட்டத்தில்தான், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிடுவதாலேயே காவேரி பிரச்சினை தீர்ந்து விடாது. அந்தப் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த காலகட்டத்தில்தான் அ.தி.மு.க. அரசு சரியான வழக்கறிஞர்களை நியமிக்காத காரணத்தாலும், வழக்கினை சரியாக நடத்தாத காரணத்தாலும்;

அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், “காவேரி பிரச்சினையில், எக்காரணம் கொண்டும் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்ற நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை வாங்கி கொடுத்தார். அப்படி வாங்கிக் கொடுத்ததையும் அ.தி.மு.க. அரசு கோட்டைவிட்டது.

குடிநீருக்கு தண்ணீரை எடுக்க வேண்டுமென்றால், அந்தந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரிலிருந்துதான் எடுக்க வேண்டும். வேறொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை எடுக்கக்கூடாது என்று காவேரி நடுவர் மன்றத்தில் இறுதி தீர்ப்பு கூறி இருந்தது. அதையும் கோட்டைவிட்டு, தமிழ்நாட்டின் பங்கிலிருந்து பெங்களூருக்கு 4.75 டி.எம்.சி. தண்ணீரை தாரை வார்த்து கொடுத்துவிட்டு கை பிசைந்து நிற்பதுதான் அ.தி.மு.க. அரசு.

இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 192 டி.எம்.சி. தண்ணீரைவிட மேலும், 60 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என கேட்டவர் கலைஞர். ஆனால், இருப்பதில் பெற்ற 192 டி.எம்.சி-யிலேயே 4.75 டி.எம்.சி. தண்ணீரை இழந்துவிட்டு நிற்பவர் இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

அடுத்து, முல்லைப் பெரியாறு அணை பற்றிய சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தேக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் யாரையும் கேட்காமலும் - அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலும் - அன்றைய அ.தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த திரு.ராஜாமுகமது அவர்களின் கையெழுத்து இல்லாமலும், “152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொள்வோம்” என ஒரு அடிமை முறிசீட்டை கேரள அரசுக்கு எழுதி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான்.

கலைஞர் அவர்கள் முதல்வராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தபோதுதான், பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். முல்லைப் பெரியாறு அணையை பலப்படத்த வேண்டும் என்பதுதான் இந்த பிரச்சினையின் முக்கிய கருத்து. அதன் காரணமாக அணை பலப்படுத்தப்பட்டது.

அணை பலப்படுத்தப்பட்ட காரணத்தால், தமிழக விவசாயிகள் அணையில் 142 அடி தண்ணீரை உயர்த்திட வேண்டுமெனவும்; கேரள விவசாயிகள் 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் 22.7.2006 அன்று உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியார் அணையில் தண்ணீரை 136 அடிக்கு பதில், 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெற்றுத்தர வித்திட்டது தி.மு.க. அரசுதான்.

ஆனால், அதற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் கமிட்டி “அணையின் நீரை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால், பேபி அணையை பலப்படுத்த வேண்டும்” என் சிபாரிசு செய்து என்று அறிவுறுத்திய பின்பும், அ.தி.மு.க. அரசு பேபி அணையை உயர்த்துவதற்கு எவ்வித சிறு முயற்சியைக்கூட செய்யவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், 2018-19ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம்-34ல் பேபி அணையை ஏன் பலப்படுத்த முடியவில்லை என்று ஒரு காரணத்தை தெரிவித்திருக்கிறார் பொதுப்பணித் துறையை வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதாவது “பேபி அணையை வலுப்படுத்த வேண்டுமானால், அந்த அணைக்கு அருகில் இருக்கிற 23 மரங்களை அகற்ற வேண்டி இருக்கிறது” என்று பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடியார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பொதுப்பணித் துறையில் மின்னல் வேகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பணியாற்றுவதைப் போலவும் நினைத்துக் கொண்டு மற்றவரை குறை சொல்லி வருகிறார். அவர் மின்னல் வேகத்திற்கு இதோ ஓர் உதாரணம்.

2013-14ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரையிலான இந்த ஆறு ஆண்டில் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம், பாசனத்திற்கென மொத்த ஒதுக்கீடு 13,606 கோடி ரூபாய். ஆனால், மொத்தம் செலவு செய்ததோ 6,973 கோடி ரூபாய்தான். இதை நான் குற்றமாக சொல்லவில்லை. 2018ஆம் ஆண்டை தணிக்கை செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் அறிக்கை - 2019ல் தெளிவாக தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு அவர் பேசுவது நல்லது.

விவரம் இல்லாமல் பேசி; வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதைவிட விவரத்தோடு பேச முதலமைச்சர் முயல வேண்டும்.!" என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan replies to tn cm palanisamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->