டாக்டர் ராமதாஸ் அரசியல் எப்போதுமே வேற லெவல்! டாக்டர் ராமதாஸின் அடுத்த திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல்வாதிகளில் பாமக நிறுவனர் எப்போதும் வித்தியாசமானவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அதற்கு அவர் வெளியிடும் அறிக்கைகளும், நடத்தும் போராட்டங்களும் சாட்சியாக அமைகிறது. மற்ற கட்சிகள் நடவடிக்கைகளில் பாமகவின் செயல்பாடு சற்று வேறு விதமாக தான் இருக்கும். 

பாமகவின் வித்தியாசமான கொள்கைகளில் புகையிலை ஒழிப்பு, மதுவிலக்கு, மரம் நடுதல், ஏரிகளை தூர் வாருதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் என்பன முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த வரிசையில் தற்போது முக்கிய இடம் பெற்றிருப்பது "காலநிலை அவசரநிலை பிரகடனம்" ஆகும். 

இது குறித்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளோ, தொழில் நிறுவனங்களோ சிந்தித்தார்களா என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஆனால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கி வைத்த அமைப்பான பசுமை தாயகம் தொடர்ந்து இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய துவங்கியுள்ளது. இன்று அதற்கான இயக்கத்தினை தன்னுடைய கையெழுத்தினை போட்டு தொடங்கி வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். 

காலநிலை அவசரநிலை பிரகடனம் குறித்து விழிப்புணர்வை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதனை பசுமைத்தாயகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் வெளியிட வேண்டும்!

உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கியுள்ளனர். புவிவெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது! இது பூமியின் ஆறாவது உயிரினப்பேரழிவு (Sixth Mass Extinction) என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். (ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் பூமியில் விழுந்து  ஐந்தாவது உயிரினப்பேரழிவு நிகழ்ந்தது)

பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதல் (Global Warming) காரணமாகும். புவிவெப்பமடைதலால் அதிகம் பாதிக்கும் பகுதியாக தமிழ்நாடு உள்ளது. வரும் ஆண்டுகளில் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க, உலகின் ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நிறுவனமும் அவசரநிலை நடவடிகைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உலகின் போக்கை தலைக்கீழாக நாம் மாற்றாவிட்டால், நமக்கும் நமது குழந்தைகளுக்கும் பாதுகாப்பான உலகம் இருக்காது!

அடுத்த 11 ஆண்டுகளுக்குள், அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் உலகினை தலைக்கீழாக மாற்ற வேண்டும் என ஐநா அறிவியலாளர்கள் IPCC குழு அறிவித்துள்ளது. அதற்கான மிகவேகமான நடவடிக்கைகளை 2020 ஆம் ஆண்டில், முழுவேகத்தில் தொடங்கினால் மட்டுமே உலகின் அழிவை தடுக்க முடியும் என எச்சரித்துள்ளது. அதாவது, இப்போதே தொடங்கி, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மாற்றினால் மட்டுமே - உலகம் அழிவதை தடுக்க முடியும்! இது அறிவியல் பூர்வமான உண்மை ஆகும்.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய அவசர காலம் இதுவாகும். எனவே, மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) அறிவிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பு கோருகிறது.

இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடத்தை நாடாளுமன்றங்களில் நிறைவேற்றியுள்ளன. லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி  உள்ளிட்ட பெருநகரங்களும், 18 நாடுகளை சேர்ந்த 1000 நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்த பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளன. உலகெங்கும் உள்ள 7000 உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் காலநிலை மாற்ற அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளன.

'காலநிலை அவசரநிலை பிரகடனம்' வெளியிடுதல் என்பது புவிவெப்பமடைதல் ஒரு பேராபத்து என்பதை அங்கீகரித்து, அதனை தடுக்கவும் சமாளிக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொள்வது ஆகும். இதன் மூலம், சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் வழக்கமான செயல்பாடுகளை கைவிட்டு, இயற்கையை காப்பாற்றவும், பேரிடர்களை எதிர்க்கொள்ளவும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்று திரட்டி போர்க்கால நடவடிக்கையில் இறங்க அனைவரும் முன்வர வேண்டும்.

1. அனைத்து அரசுகளும், அமைப்புகளும், நிறுவனங்களும் காலநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) அறிவிக்க வேண்டும்

2. புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல்திட்டத்தை (Climate Emergency Action Plan) ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

3. அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி, காலநிலை செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்றே செயல்பட தொடங்காவிட்டால், நமக்கும், நமது குழந்தைகளுக்கும் எதிர்காலமே இல்லை. இந்த அவசரநிலையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

இது பீதியடையும் நேரம் அல்ல. மாறாக, அனைவரும் ஒன்றுபட்டு துணிச்சலை வெளிப்படுத்தும் நேரம். இயற்கை பேரழிவை தடுத்து, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு நீதியான, செழிப்பான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்போம்.

பூவுலகம் அழியாமல் காப்பாற்றுவோம்.

புவிவெப்பமடைதல் குறித்த உண்மைகள் :

புவிவெப்பமடைதல் என்றால் என்ன?

பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases), உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படும் அளவு சூரிய வெப்பத்தை பிடித்து வைக்கின்றன. பூமியின் இதமான தட்பவெப்ப நிலைக்கு இதுவே காரணம்.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் வளிமண்டலத்தின் கரியமிலவாயு அதிகரித்து செல்கிறது. அதன் வளிமண்டல அடர்த்தி 150 ஆண்டுகளுக்கு முன்பு 280 ppm ஆக இருந்தது. தற்போது 415 ppm ஆக அதிகரித்துள்ளது. (ஒரு ppm என்பது 10 லட்சத்தில் 1 பகுதி ஆகும்)

கரியமிலவாயு அதிகரிப்பதினால், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையில் 1.1 டிகிரி செல்சியல் உயர்ந்துள்ளது. இதுவே புவிவெப்பமடைதல் (Global Warning) எனப்படுகிறது. இது மிகப்பெரிய ஆபத்து ஆகும்.

புவிவெப்பமடைதலால் ஏற்படும் ஆபத்து என்ன?

பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதலால் காரணமாகும். 

புவிவெப்பம் அதிகரிப்பதற்கு பணக்கார நாடுகளும், பணம் படைத்த மக்களுமே காரணம். ஆனால், இதனால் ஏற்படும் பேராபத்துகளால் முதலாவதாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படப்போவது பின்தங்கிய நாடுகளும், ஏழை மக்களுமே ஆவர். அந்த வகையில் தமிழ்நாடு மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய பகுதியாக இருக்கிறது.

தற்போதைய 1.1 டிகிரி செல்சியல் வெப்பநிலை அதிகரிப்பால் மிக மோசமான இயற்கை சீற்றங்கள் நிகழ்கின்றன. இந்தப் பாதிப்புகள் மேன்மேலும் அதிகரித்து செல்லும். இனி ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பாதிப்புகள் அதற்கு முந்தைய ஆண்டின் பாதிப்பை விட அதிகமாக இருக்கலாம்.

புவிவெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் - அதன்பின்னர் ஏற்படுக்கூடிய பேராபத்துகள் மிக மோசமானதாக இருக்கும். உலகம் மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக ஆகிவிடும்.

புவிவெப்பமடைவதை தடுப்பது எப்படி?

புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க வேண்டும் என்றால், வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தியை தற்போதைய 415 ppm அளவில் இருந்து, 350 ppm அளவுக்கு கீழாக குறைக்க வேண்டும். 

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் பயன்பாடு இதற்கு மேலும் அதிகமாகக் கூடாது. 2020 ஆம் ஆண்டுமுதல் மிகவேகமாக குறைக்கப்பட வேண்டும்.

மாசுக்காற்று வெளியாகும் அளவை 2030 ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும். பின்னர் 2050 ஆண்டுக்குள் அது 'பூஜ்யம்' ஆக வேண்டும். அதாவது, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாடு 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்க கூடாது. பின்னர் மிகவேகமாக இவற்றை கைவிட வேண்டும்.

மேலும், உலகெங்கும் காடுகளும், பசுமைப்பகுதிகளும், இயற்கை வளங்களும் உடனடியாக பாதுகாக்கப்பட்டு, அவற்றின் பரப்பு அதிகமாக்கப்பட வேண்டும்.

அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களை சமாளித்து வாழும் வகையிலான தகவமைப்பு நடவடிக்கைகளை (Adaptation and Resilience) உடனடியாக தொடங்க வேண்டும்.

காலநிலை அவசரநிலை பிரகடனம்:

சென்னை பெருநகரில் மேற்கொள்ள வேண்டிய 20 நடவடிக்கைகள்

காற்று மாசுபாடு

1. போக்குவரத்தில் புகைக்கரியை (Soot) ஒழிக்க வேண்டும். வாகன பராமரிப்பு மற்றும் திடீர் சோதனையை கட்டாயமாக்க வேண்டும் (Regularly maintain and inspect vehicles)

2. நகர்ப்புற சாலைகளை புழுதியற்றதாக மாற்ற வேண்டும்.

3. மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அதற்கான மின்னூட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் (Electric vehicle charging station). & தமிழ்நாடு மின்சார வாகங்கள் கொள்கையை வெளியிட வேண்டும் (Tamil Nadu Electric Vehicle Policy)

போக்குவரத்து :

4. பெருநகரப் பேருந்துகள் எண்ணிக்கையை 8000 ஆக அதிகமாக்க வேண்டும். அவற்றை புகைக்கரி இல்லாத (Soot-free buses) பேருந்துகளாக அல்லது மின்சார பேருந்துகளாக இயக்க வேண்டும்.

5. வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும். அடுக்குமாடி வாகன நிறுத்தம் (Multilevel car parking) அமைப்பதை கைவிட வேண்டும்.

6. நடைபாதைகளை மேம்படுத்த வேண்டும். Chennai Non-Motorised Transport Policy 2014 கொள்கையை நடைமுறைபடுத்த வேண்டும்.

7. வளர்ச்சிக்கான போக்குவரத்து கொள்கையை செயலாக்க வேண்டும் (TOD - Transit-Oriented Development) & BRT பேருந்து போக்குவரத்து முறையை செயல்படுத்த வேண்டும்,

குப்பை மாசு :

8. தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

9. உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும்

(EPR - Extended Producer Responsibility).

10. குப்பையை வகைப்பிரித்து மேலாண்மை செய்யும் முறையை செயலாக்க வேண்டும்.

11. குப்பை எரிப்பை தடுக்க வேண்டும். அரசாங்கமே குப்பையை எரிக்கும் மிக மோசமான (Waste-to-energy: Incineration) திட்டத்தை கைவிட வேண்டும்.

மின்சக்தி :

12. சூரிய ஆற்றல் மேற்கூறைகள் அமைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்

(Solar rooftop movement).

13. குளிர்ச்சியான மேற்கூறைகள் எனும் இயக்கத்தை தொடங்க வேண்டும்

(Cool roofs movement).

14. பசுமைக் கட்டட விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்

(Green Buildings/Energy Conservation Building Code).

15. உள்ளூர் ஆற்றல் முன்முயற்சி திட்டங்களை செயலாக்க வேண்டும்

(District energy initiative).

தண்ணீர் :

16. மழைநீர் சேகரிப்பு முறையினை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

17. ஆறுகள், நீர் நிலைகள் மாசுபாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

18. கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களை வகுத்து செயலாக்க வேண்டும்.

நகர்ப்புற பசுமை :

19. நகர்ப்புற உயிரிப்பன்மயத்தை காப்பாற்றும் செயல்திட்டத்தையும் (City Biodiversity Action Plan), பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கான கொள்கையையும் (City Public Space Policy) உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

பேரிடர் :

20. சென்னை பெருநகருக்கான தகவமைப்பு மற்றும் பேரிடர் சமாளிப்பு திட்டங்களை முழுமையாக செயலாக்க வேண்டும் (Adaptation and Resilience Action Plan)

மேலும், தமிழ்நாடு மாநில புதிய காலநிலை செயல்திட்டத்தை (Revised – Tamil Nadu State Action Plan on Climate Change), காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) உள்ளடக்கிய வகையில் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss start awareness program Climate Emergency Declaration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->