நேற்று வெளியான செய்தி... பெரும் அதிர்ச்சியில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது வாரத்திலேயே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்நாள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களில் ஒரு படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்த சிங்களக் கடற்படையினர், காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு அருகில் மீன் பிடித்ததாகக் கூறி பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்களை  இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த சிங்களப் படையின் செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த திசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் மட்டும் 56 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜனவரி மாதத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படை இரு முறை தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி மாதத்தில் 80 மீனவர்களும், மார்ச் மாதத்தில் 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில், அதற்கு முன்பாக ஏப்ரல் 3-ஆம் தேதி கூட தமிழக மீனவர்கள் 12 பேரை சிங்களப் படை கைது செய்தது. மே மாதத்தில் தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் வரை கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து கடந்த 6 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட படகுகள் இன்று வரை மீட்கப்படவில்லை.

தடைக்காலம் முடிவடைந்து ஜூன் 16-ஆம் தேதி முதல் தான் தமிழ்நாடு மற்றும் புதுவை மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது  தமிழ் மீனவர்களை பழிவாங்குவதற்கு சிங்களக் கடற்படையினர் துடிப்பதையே காட்டுகிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கூட்டுப்பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம் கடந்த மார்ச் 27-ஆம் நாள் நடைபெற்றது. அப்போது தமிழக மீனவர்கள் மீது கடுமை காட்டுவதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதையும் மீறி  மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை இந்திய இறையாண்மைக்கு இலங்கை விடுக்கும் சவாலாகவே பார்க்க  வேண்டியிருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா தான் செய்து வருகிறது. ஆனாலும், அவற்றையெல்லாம்  மறந்து விட்டு, தமிழ் மீனவர்களை சிங்களப்படை கைது செய்வதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம் ஆகும். அதனால் தான், தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அழிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. ஒரு படகு  பறிமுதல் செய்யப்பட்டால், அதனால் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிடும். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமை ஆகும்.

எனவே, சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்பதற்கும் இரு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, சிங்களப் படைகளால் தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக தமிழக - இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும் வகை செய்ய வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Karaikal Fisherman arrest


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->