''மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து இன்றை அரசு கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பது பயனற்றது''; திமுக ரகுபதி..!
DMKs Raghupathi says it is useless for the government to try to negotiate with Karnataka on the Meghedatu Dam issue today
"மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது. காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பதில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிகர் எவருமில்லை'' என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, இது குறித்து மேலும் கூறியதாவது;
தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய காவிரி நீரைப் போராடிப் பெறுவதிலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்றைய தினம் திமுக அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ரகுபதி, ''இந்தியாவிலேயே சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு வழக்குகளை சிறப்பாக நடத்தி வெற்றிபெற்ற அரசு திமுக அரசு. ஆனால், மேகேதாட்டு விவகாரத்தில் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கைச் சரியாகக் கையாளவில்லை என ஆதவ் அர்ஜுனா தவறாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் ஒரு கற்றறிந்த வழக்கறிஞரிடம் சென்று என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஓர் அமைச்சர் இவ்வாறு பொய்யான தகவலை தெரிவிக்க கூடாது.'' என்று விமர்சித்துள்ளார்.
அதேப்போன்று, மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி கேட்கிறது. அப்போது, தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் இன்றி தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்குகிறது. அந்த உத்தரவை எதிர்த்துதான் திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேகேதாட்டு அணை திட்டமே கூடாது என்பதுதான் நமது முதன்மை நிலைப்பாடாக இருக்கும் போது, இந்த உத்தரவே தவறு எனக் கூறி உச்ச நீதிமன்றம் சென்றதாகவும், அந்த வழக்கில் மேகேதாட்டு அணையே கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் எதிர்ப்பின்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பது தவறானது என்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்றும், இன்னும் அணைக்கான அடிப்படை வேலைகளே தொடங்கப்படாததால், இது ஒரு தொடக்க கட்டம் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளதாகவும், குழந்தையே பிறக்காத போது பெயர் வைப்பதைப் போன்ற சூழல்தான் இது என்று தெரிவித்துள்ளார்.
இது எல்லாம் ஆதவ் அர்ஜுனாவுக்கு புரியாது, புரிய வாய்ப்பும் கிடையாது என்றும், லாட்டரியில் கவனம் செலுத்துபவர்கள். இப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே தான் அவர் அவ்வாறு தவறான தகவலை கூறி உள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
அதேப்போன்று, மேகேதாட்டு அணை கட்ட கூடாது. அதற்காக சட்டமன்றத்திலே எங்களது எதிர்க்கட்சி தலைவர் ஒரு திருத்தம் கொண்டு வந்து அதில் ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், புதிய நடுவர் மன்றம் அமைத்து அதில் மேகேதாட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது என்றும், காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பதில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிகர் எவருமில்லை என்று பெருமிதமாக பேசியுள்ளார்.
இப்போது முதல்வர் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுகிறார்கள். அதற்காக ஏதாவது சாக்கு போக்கு காரணத்தை கூற வேண்டும் என திமுக மீது வீண் அவதூறு பரப்புகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். ஆனால், இன்றைய அரசு கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முயற்சிப்பது பயனற்றது என்றும், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த முடிவும் வந்ததில்லை; அது வெறும் 'ரீல்ஸ்' எடுக்க மட்டுமே உதவும். பேச்சுவார்த்தை என்பது விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்து, காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று தவெக அரசின் முயற்சியை விமர்சித்துள்ளார்.
அத்துடன், கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பிரச்சினையை தீர்க்க உடனே ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், முதல்வர் விஜய், பிரதமரைச் சந்தித்தபோது மேகேதாட்டு விவகாரத்திற்காகத் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி கடிதம் கொடுத்தாரா ..?அல்லது நேரில் வலியுறுத்தினாரா..? என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் நலனிலும் டெல்டா விவசாயிகள் நலனிலும் பட்டும் படாமல் இருக்கிறார்கள் என்றும், முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளின் மொத்த உருவம்தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விமர்சித்துள்ளதோடு, வழக்கறிஞர் உமாபதி குறித்து சட்டப்பேரவையில் நல்லவிதமாக பேசிய ஆதவ் அர்ஜுனா இப்போது மாற்றிப் பேசுகிறார். முன்பொரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு என முரண்படுகிறார்கள் என்று சாடியுள்ளார்.
எங்களைப் பொறுத்தவரை (திமுக) கடந்த 2-3 மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி தண்ணீர் வரவில்லை. டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி காவிரி நீரைப் பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்பொது கூறியுள்ளார்.
English Summary
DMKs Raghupathi says it is useless for the government to try to negotiate with Karnataka on the Meghedatu Dam issue today