தென் மாவட்டங்களில் திமுக புதிய திட்டம்: ஓபிஎஸ் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் இலக்கு!6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்!
DMK new plan in the southern districts Targeting Mukulathor votes through OPS DMK micro plan in 6 districts
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தென் மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மூலம் திமுக புதிய அரசியல் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், திமுக இந்த முறை மைக்ரோ லெவலில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலில் வென்றதை விடவும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தலைமையகம் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக தென் மாவட்டங்களில் நிலவி வரும் கட்சி உள்பிரச்சினைகளை சரிசெய்யும் பொறுப்பு சபரீசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஈர்க்கும் முயற்சியாக ஓபிஎஸ் தரப்பினரையும் திமுக அணுகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிமுக – பாமக கூட்டணி அமைந்துள்ள சூழலில், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் அரசியல் பேசுபொருளாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வன்னியர் சமூகத்திற்கு 11.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த தேர்தலிலும் அதனை மீண்டும் வாக்குறுதியாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து முக்குலத்தோர் சமூக மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக ஓபிஎஸ் மூலம் இந்த விவகாரத்தை தென் மாவட்டங்களில் தீவிரமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம், கோவை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்கள் அதிகம் இருப்பதால், கடந்த தேர்தலில் அந்த பகுதிகளில் திமுக பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை அந்த நிலையை மாற்றும் முயற்சியிலும் திமுக கவனம் செலுத்தி வருகிறது.
அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவும் திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
மேலும் போடி தொகுதியில் ஓபிஎஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், அவரது மகனும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
English Summary
DMK new plan in the southern districts Targeting Mukulathor votes through OPS DMK micro plan in 6 districts