'மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளித்த நிதி முட்டை' என பொதுகூட்டத்தில் பொதுமக்களுக்கு முட்டை மற்றும் முட்டை போண்டா வழங்கிய தி.மு.க.வினர்..!
DMK members distributed eggs and egg bondas to the public at a public meeting in Coimbatore
'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பெயரில், தி.மு.க. சார்பில் கோவை ராஜவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தி.மு.க.வினர் இலவசமாக முட்டை வழங்கியுள்ளனர்.
அந்த முட்டையை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளித்த நிதி முட்டை என கூறியதோடு, முட்டை போண்டா போட்டும் பொதுமக்களுக்கு சாப்பிட வழங்கியுள்ளனர். அப்போது, முடிவில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அளித்த நிதி முட்டை என குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை பொதுமக்களிடம் தி.மு.க.வினர் காண்பித்து, மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

கடலூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது; அனைத்து வகையிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளதாகவும், மாநில அரசுக்கு வர வேண்டிய நிதியை தடுத்து மக்களுக்கு செய்ய கூடிய நலத்திட்டங்களை நிறுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செய்கிறதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோவையில் சிறு, குறு தொழில் நிறைந்த தெற்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். அவர் டெல்லி சென்று சிறு, குறு தொழில்துறையினர் படும் கஷ்டங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளதோடு, பட்ஜெட் குறித்தும், தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி உள்பட நிதி குறித்தும் பேசலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எதையும் செய்யவில்லை. மக்களுக்கு நல்லது செய்வது போல மக்களை ஏமாற்றி வருகிறார் என்று வானதி ஸ்ரீனிவாசனை விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
DMK members distributed eggs and egg bondas to the public at a public meeting in Coimbatore