'ஆபத்தான திட்டம்... உடனே கைவிட வேண்டும்' என எச்சரிக்கை...! - கல்பாக்கம் ஈனுலை திட்டம் மீது வைகோ கடும் எதிர்ப்பு
Dangerous project must be abandoned immediately warns Vaiko strongly opposes Kalpakkam Eenulai project
கல்பாக்கத்தில் முன்னெடுக்கப்படும் ஈனுலைத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் விமர்சனத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், “கல்பாக்கத்தில் அமைந்துள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலை (PFBR) அணுப்பிளவு செயல்பாட்டின் முக்கிய கட்டத்தை கடந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் 2004ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2010ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வர திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பல்வேறு தடைகள் காரணமாக, உலக நாடுகள் பல கைவிட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம் தொடர்ந்து தாமதமடைந்துள்ளது.
தற்போது 2026 செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. நீண்ட தாமதத்தால் திட்டச் செலவு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பு குறைபாடுகள், அதிக பொருளாதாரச் சுமை மற்றும் தேவையின்மை காரணங்களால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் கைவிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் திரவ சோடியம் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதையும், அதனைத் தொடர்ந்து அந்த உலை மூடப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், பிரான்சின் சூப்பர் பீனிக் ஈனுலையும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார காரணங்களால் நிறுத்தப்பட்டது.
இந்த ஈனுலைத் திட்டத்தில் அணுவுலைகளில் இருந்து கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளான புளூட்டோனியம் மீண்டும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவ்வகை கழிவுகள் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் பல நிபுணர்களால் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக வளர்ச்சிக்கான நிதி கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டம் கோரப்பட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அரசியல் நோக்கத்துடன் சிலர் தவறான வாக்குறுதிகளை வழங்குகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.
மேலும், கூடங்குளத்தில் ஏற்கனவே பல அணுவுலைகள் மற்றும் அணுக்கழிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆபத்தான ஈனுலைகளை செயல்படுத்துவது தமிழக மக்களை கதிரியக்க ஆபத்தில் தள்ளும் முயற்சியாகும்.
தமிழக மக்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை முன்னெடுப்பது ஏற்க முடியாதது என்றும், இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dangerous project must be abandoned immediately warns Vaiko strongly opposes Kalpakkam Eenulai project