தொகுதி பங்கீடு இழுபறி: அவ்ளோலாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. பாஜக குடுத்த லிஸ்டை பாருங்க!
Constituency sharing controversy This is not possible Edappadi has put his shoulder to the BJP Look at the list that BJP has put up
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இறுதி செய்யப்படாமல் இழுபறியாக நீடித்து வருகிறது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதைக் குறித்து பின்னணி ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை மேடைக்கு வருவதற்கு முன்பாகவே முக்கிய முடிவுகளை ரகசியமாக ஆலோசித்து முடிவு செய்து விடுவது வழக்கம். அதன் பிறகே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக் குழுக்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை அறிவிப்பது அரசியல் வியூகமாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், சில முக்கிய தொகுதிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் கோருவதால் தொகுதி பங்கீட்டை முடிவுசெய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூட்டணி கட்சிகள் கேட்கும் பல தொகுதிகள் திமுக மற்றும் அதிமுக தற்போது வைத்திருக்கும் சிட்டிங் தொகுதிகளாக இருப்பதும் இந்த இழுபறிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக் குழுவினருடனும், தேர்தல் வியூக நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில், அதிமுக கட்டாயம் போட்டியிட வேண்டிய தொகுதிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
தேர்தல் வியூக நிபுணர்கள் தயாரித்துள்ள இரண்டு பட்டியல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று அதிமுக போட்டியிட ஏற்ற தொகுதிகள் பற்றிய பட்டியல்; மற்றொன்று பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகள் பற்றிய பட்டியல். இதனுடன் ஏற்கனவே எடப்பாடி வைத்திருக்கும் பட்டியலையும் ஒப்பிட்டு, இறுதியாக ஒரு ஒருங்கிணைந்த பட்டியலைத் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். பின்னர் அந்த பட்டியலை பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் வழங்கி, அதற்கேற்ப கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க அறிவுறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி முன்பே தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் இதற்கு பாஜக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு சுமார் 25 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், அதற்குச் சமமாக பாஜகவுக்கும் 25 தொகுதிகள் வழங்குவது என்ற எண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, பாஜக தரப்பில் இருந்து கூடுதலாக 29 தொகுதிகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் காங்கிரசை விட ஒரு தொகுதி குறைவாக, அதாவது 27 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குவது என்ற சமரச திட்டத்தை எடப்பாடி பரிசீலித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் “பாஜகவுக்கு அடிமை அல்ல; திமுக தான் காங்கிரசுக்கு அடிமை” என்ற அரசியல் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எண்ணிக்கை மற்றும் தொகுதி தேர்வு ஆகிய இரண்டிலும் இழுபறி நீடித்து வரும் நிலையில், இரண்டையும் ஒரே நேரத்தில் முடிவு செய்து முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Constituency sharing controversy This is not possible Edappadi has put his shoulder to the BJP Look at the list that BJP has put up