39 தொகுதிகள் கேட்டு திமுக தலைமையிடம் காங்கிரஸ் அழுத்தம்! அறிவாலயத்துக்கு பறந்த லிஸ்ட்..அதிர்ச்சியில் திமுக!
Congress pressures DMK leadership to ask for 39 seats List sent to Arivalayam DMK in shock
வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சி, இம்முறை அந்த எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி 39 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக காங்கிரஸ் மேலிடம் அமைத்த ஐவர் குழு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக திமுக கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்து வரும் காங்கிரஸ், 2004 முதல் 2021 வரை நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களை திமுகவுடன் இணைந்தே சந்தித்து வந்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், அதன் பின்னர் மீண்டும் திமுக கூட்டணிக்குத் திரும்பியது. 2021 சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விகிதமே, இம்முறை அதிக தொகுதிகள் கேட்கும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டதும், தமிழக அரசியல் சமன்பாடுகளில் புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது. ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற விஜய்யின் அறிவிப்பு, நீண்ட காலமாக அதிகாரப் பதவிகளிலிருந்து விலகியே இருந்த தமிழக காங்கிரசாரிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதன் தாக்கமாக, திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், இம்முறை ஆட்சியில் உரிய பங்கு பெற வேண்டும்; அதற்காக அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் காங்கிரஸ் தரப்பில் அதிகரித்துள்ளது.
இந்த பின்னணியில், திமுக தலைமையிடம் நேரடியாகப் பேச காங்கிரஸ் மேலிடம் திடீரென ஐவர் குழுவை அமைத்தது கவனம் பெற்றுள்ளது. இந்தக் குழுவில் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, குறைந்தது 39 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், காங்கிரசுக்கு சாதகமானதாக கருதப்படும் 125 தொகுதிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து 39 தொகுதிகளின் பட்டியலையும் திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த கோரிக்கைக்கு உடனடி முடிவு எடுக்காமல், திமுக சார்பிலும் ஒரு குழு அமைத்து விரிவாக ஆலோசிக்கலாம் என்ற பதிலையே முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், காங்கிரசின் இந்த கூடுதல் கோரிக்கை கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாக்கும் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கேட்டதாக சொல்லப்படும் தொகுதிகளின் பட்டியல் கசிந்துள்ளது. அதன்படி, பொன்னேரி, வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர், கே.வி.குப்பம், கலசப்பாக்கம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஓமலூர், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், ஊட்டி, சூலூர், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், அறந்தாங்கி, காரைக்குடி, மேலூர், மதுரை தெற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக–காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
English Summary
Congress pressures DMK leadership to ask for 39 seats List sent to Arivalayam DMK in shock