சலசலப்புக்கு பின் ஓ.பி.எஸ் இல்லத்தில் மீண்டும் இடம்பெற்ற 'அம்மா'வின் புகைப்படம்...!
Amma photograph reappears at OPSs residence
அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த மாதம் 27-ஆம் தேதி சென்னை மெரினாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முறைப்படி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் அவசர அவசரமாக அகற்றப்பட்டது.

மேலும், அவரது வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் செதுக்கப்பட்டிருந்த அதிமுகவின் அடையாளச் சின்னமான ‘இரட்டை இலை’, இயந்திரங்கள் கொண்டு வேரோடு வெட்டி எறியப்பட்டதுடன், இல்லத்தின் முகப்பில் இருந்த கட்சி அடையாளங்களும் முற்றிலுமாக உருமாற்றப்பட்டன.
ஓ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி நடவடிக்கைகள், ரத்தத்தின் ரத்தங்களான அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்த இயக்கத்திற்கு ஓ.பி.எஸ் துரோகம் இழைத்துவிட்டதாக அவர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், ஓ.பி.எஸ் இல்லத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் புகைப்படம் கம்பீரமாகத் காட்சியளிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரைச் சந்திக்கச் சென்றபோது எடுத்துக் கொண்ட குழுப் புகைப்படத்தின் பின்னணியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவரது இல்லத்திலிருந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சுவடுகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவை உயிர்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தரப்பில் கசிந்துள்ள தகவலின்படி, ஓ.பி.எஸ் திமுகவில் ஐக்கியமான முடிவில் அவரது இளைய மகன் ஜெயபிரதீப்புக்குத் துளியும் உடன்பாடு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
திமுகவில் இணைவதற்குப் பதில் மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தனித்துச் செயல்படலாம் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், தனது எதிர்ப்பையும் மீறி தந்தை எடுத்த முடிவாலும், இல்லத்திலிருந்த மாபெரும் தலைவர்களின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டதாலும் ஜெயபிரதீப் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இவ்வாறு அதிருப்தியில் இருந்த மகனைச் சமாதானப்படுத்தி, குடும்பத்திற்குள் நிலவிய சலசலப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே ஜெயலலிதாவின் படத்தை மீண்டும் இல்லத்தில் வைக்க ஓ.பி.எஸ் பச்சைக்கொடி காட்டியதாகத் தெரியவருகிறது.
English Summary
Amma photograph reappears at OPSs residence