“அதிமுக தீண்டத்தகாத கட்சி அல்ல; திமுக - அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு?” - ஆர்.எஸ். பாரதி பேச்சால் பரபரப்பு - Seithipunal
Seithipunal


திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்தால் அதில் எந்தத் தவறும் இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி கிடையாது; அது எங்களுக்குப் பங்காளி போன்ற கட்சி” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது சந்தர்ப்பவாத அரசியல். திமுகவோ, அதிமுகவோ அல்லாத வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது இந்த இரு கட்சிகளுக்கும் விருப்பமில்லை” என்று விமர்சித்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, “நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி பேசவில்லை; கூட்டணியும் வைக்கவில்லை. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதில் என்ன பெரிய உலக மகா தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி கிடையாது. சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளே கடந்த காலங்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்துள்ளன. இப்போது தவெகவுடன் சென்றுவிட்டு, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி வைக்காதது போல பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிபிஐ, சிபிஎம் கட்சிகள் 1964-ஆம் ஆண்டு பிரிந்தாலும், பல விஷயங்களில் இன்றும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அதுபோல, எங்களிடமிருந்து பிரிந்து சென்ற கட்சிதான் அதிமுக. அதற்காக நாங்கள் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி அமைத்தாலும் அதில் தவறு எதுவும் இல்லை” என்று கூறினார்.

“நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதிமுக என்பது எங்களுக்கு பங்காளி போன்ற கட்சி. தற்போது எந்த கூட்டணி குறித்தும் பேசவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் இரு கட்சியினரும் ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். அதை பார்க்கும்போது, இரு கட்சித் தொண்டர்களும் மனதளவில் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) விலகி தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, “நடந்து முடிந்த தேர்தல் யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. மிக விரைவில் மாற்றம் வரும். அப்போது நாங்கள் யார் என்பதை காட்டுவோம்” என்றார்.

மேலும், “இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். யாரும் விஜய் ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்துவிட்டது. அந்த அரசியல் அதிசயத்தில் சில பலவீனமானவர்கள் பலியாகிவிட்டார்கள்; உறுதியானவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்” என்றும் கூறினார்.

கட்சியின் பெயரில் வெற்றி பெற்று, சில நாட்களிலேயே வேறு கட்சிக்குச் செல்வது சந்தர்ப்பவாதம் என்றும் விமர்சித்த ஆர்.எஸ். பாரதி, “ஒரு கட்சியின் தொண்டர்களின் உழைப்பில் வெற்றி பெற்று, 10 நாட்களிலேயே கட்சி மாறுவது மிகவும் கேவலமான செயல். மக்கள் இதனை புரிந்துகொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

அவரது இந்த கருத்துகள், திமுக - அதிமுக உறவு மற்றும் எதிர்கால கூட்டணி சாத்தியங்கள் குறித்து தமிழக அரசியலில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK is not an untouchable party what is wrong with a DMK AIADMK alliance RS Bharathi remarks spark a stir


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->