அதிமுகவின் 90% தொண்டர்கள் தவெகவை நோக்கி வருகிறார்கள்! அதிமுக + தவெக இணைந்தால் மிகப்பெரிய சக்தி உருவாகும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக இணைந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் சக்தி உருவாகும் என்றும், முதல்வர் விஜய்யின் விருப்பமும் அதுவே என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் பலர் கட்சியில் இணைந்தனர்.

அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, “தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் திமுகவும் அதிமுகவும் ஒன்றாகிவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். அதனால்தான் அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீத தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

மேலும், “ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக வேறு திசையை நோக்கிச் செல்லத் தொடங்கியபோது முதலில் குரல் கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பயணித்த ஒரு மூத்த தலைவரை அக்கட்சி புறக்கணித்தது. அது செங்கோட்டையனின் தவறு அல்ல; அதிமுக தலைமையின் தவறு. ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவரை அன்போடு வரவேற்று, இன்று சட்டமன்றத்தில் அவை முன்னவராகவும் அமைச்சராகவும் பொறுப்பு வழங்கியுள்ளார்” என்று கூறினார்.

அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், “தவெகவில் இணையும் அதிமுக தொண்டர்களை விஜய் மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்தால் மிகப்பெரிய அரசியல் சக்தி உருவாகும். முதல்வர் விஜய்யின் விருப்பமும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்தார்.

புதியதாக இணைந்தவர்களிடம் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். “மற்ற கட்சிகளைப் போல பதவி தருவதாகக் கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக அல்ல. எங்கள் தலைவர் உங்களுக்கு தகுந்த நேரத்தில் பொறுப்புகளை வழங்குவார்” என்றார்.

திமுக அரசை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, “தவெக அரசு பொறுப்பேற்று 30 நாட்களே ஆன நிலையில் மின்துறையை விமர்சிக்கிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகளை ஏன் செந்தில் பாலாஜிக்கு ஒப்படைத்தார்கள்? பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு அந்தப் பொறுப்புகள் ஏன் வழங்கப்படவில்லை? கொள்ளையடித்து குடும்பத்திற்கு சேர்ப்பதற்காகவே அந்த அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டன” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “இந்த 30 நாட்களில் தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் ஒரு மெகாவாட் மின்சாரத்தில் கூட ஊழல் செய்தார் என்று யாராலும் கூற முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு, அதிமுக – தவெக இணைப்பு குறித்த புதிய அரசியல் விவாதங்களை தமிழக அரசியலில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A massive force would emerge if AIADMK and TVK joined hands Minister Aadav Arjuna


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->