திருவிழா : பொய்க்கால் குதிரையாட்டத்தை எப்படி ஆடுகிறார்கள்.!
poikkal kudhiraiyattam in thiruvizha
பொய்க்கால் குதிரையாட்டம்:
தமிழர்களின் நாடி துடிப்பாக நாட்டுப்புற கலைகளே விளங்கி வந்தன. ஆனால் இப்பொழுது அவை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. கலைகள் மறைந்து போனாலும் மண்ணின் அடையாளங்களாக என்றும் அவை போற்றப்படுகின்றன.
கிராமத்தில் கோயில் திருவிழா என்றால், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்று கிராமிய நடன நிகழ்ச்சிகளுடன், சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. இருந்தாலும், பொய்க்கால் குதிரையாட்ட கலைக்கு என்றுமே அதிக மவுசு உண்டு.
பொய்க்கால் குதிரையாட்டம்:
பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ராஜா, ராணி வேடம் புனைந்து, மரக்காலில் நின்று ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டமாகும். இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரையாட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆட்டம், ஒடிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது.
பொய்க்கால் குதிரையாட்டத்தை எப்படி ஆடுகிறார்கள்?
குதிரையை பார்க்காதவரும் பொய்க்கால் குதிரையாட்டத்தை பார்க்க ஓடி வருவார்கள். எப்படித்தான் இந்த குதிரைபோல இவர்கள் முன்னுக்கும், பின்னுக்கும் தூக்கி ஆடுகின்றனர் என்பதை பார்ப்பதற்காக!
ஆடுபவர்கள் முகத்துக்கு நல்ல வண்ணக்கலர் பூச்சுப் பூசி, அவர்கள் உண்மை முகம் தெரியாதது போல் பச்சைக்கலரில் துணியை அணிந்து ஆடுவார்கள்.
இக்கலையை ஆடுபவர்கள் ராஜா, ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் செல்கின்ற எல்லா பகுதிகள் மற்றும் கோவில் திருவிழாக்களிலும் பங்கு பெறுகிறது.
இதில் 1.25 அடி உயரமுள்ள கட்டைகளை கால்களில் கட்டிக் கொண்டு, 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும்போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஒரு ஆளைப்பிடித்து தான் நிற்க முடியும்.
பொய்க்கால் குதிரையாட்டத்தில் ஆடப்படும் முறைகள்:
பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன்புறம் செல்லுதல், பின்புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் போன்ற முறைகளில் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவார்கள்.
இசைக்கருவிகள்:
பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு கோந்தளம் எனப்படும் இரட்டை முகத்தோல் கருவி பக்க இசையாக பயன்படுகிறது. மேலும் இரு தவில்கள், இரு நாகசுரங்கள், பம்பை, கிடுகிட்டி போன்ற இசைக்கருவிகள் இவ்வாட்டத்திற்கு பக்க இசையாகப் பயன்படுகின்றன.
English Summary
poikkal kudhiraiyattam in thiruvizha