900-க்கும் மேற்பட்ட தமிழக லாரி ஓட்டுனர்கள் உணவின்றி 13 நாட்களாக பரிதவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் சென்ற தமிழக சரக்குந்து ஓட்டுனர்கள் 900-க்கும் மேற்பட்டோர் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி, கடந்த 13 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வருவது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு காஷ்மீரில் இருந்து ஆப்பிள் ஏற்றி வருவதற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட சரக்குந்துகள் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி புறப்பட்டன. அவை ஆப்பிள் ஏற்றிக் கொண்டு கடந்த 7-ஆம் தேதி   காஷ்மீரின் சோபியான் பகுதியிலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது.

அதனால் காஷ்மீரில் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினரின் உதவியுடன் சாலைகளில் பனி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும் போக்குவரத்தை முழுமையாக சீரமைக்க முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை மட்டும் பாதுகாப்பாக அங்கிருந்து  வெளியேற அனுமதித்த காஷ்மீர் அரசு, சரக்குந்து உள்ளிட்ட வாகனங்கள் வெளியேற அனுமதிக்கவில்லை.

இதனால் தமிழகத்திலிருந்து சென்ற 450-க்கும் மேற்பட்ட சரக்குந்துகளின் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 40 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன. காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதியில் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடுமையான பனிப்பொழிவில் சிக்கியுள்ள அவர்களில் பலருக்கு மோசமான உடல்நலக் குறைவும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகளும் இல்லாததால் அவர்களின் அவதி அதிகரித்துள்ளது.

இது குறித்து சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த லாரி டிரைவர் கூறியதாவது, தொடக்கத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது உண்ணாமை தான். ஆனால் தற்போது பனிப்பொழிவு குறைந்தபோதும் இன்னும் லாரிகள் இயக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இங்கு வந்துள்ள அனைவரும் கடும் குளிரில் அவதிப்பட்டு வருகிறோம். ஒருவேளை உணவுக்கு நாங்கள் பெரும்பாடு படவேண்டியது உள்ளது. கையிருப்பும் குறைந்து வருவதால், நிலைமையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பயமாக உள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டுகிறோம் என கூறினார்.

இதற்கிடையே, காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்களை மீட்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் சென்ற தமிழக சரக்குந்து ஓட்டுனர்கள் 900-க்கும் மேற்பட்டோர்  கடுமையான பனிப்பொழிவில் சிக்கி, கடந்த 13 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

காஷ்மீரில் பெரும்பான்மையான சுற்றுலா வாகனங்கள் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சரக்குந்துகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இல்லாவிட்டாலும் அணி அணியாகவாவது சரக்குந்துகளை   பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். அதுவரை சரக்குந்து ஓட்டுனர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை காஷ்மீர் அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், காஷ்மீர் ஆளுனரிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார். 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu lorry drivers in kashmir without food


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->