பங்கு சந்தை அலறல்… அதானி குழுமத்தில் ஒரே நாளில் 10% மதிப்பு வீழ்ச்சி...!
Stock market turmoil Adani Group loses croresvalue single day
அதானி குழுமத்தின் பங்குகள் இன்று பங்கு சந்தையில் அதிரடி வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளர்களை பதற வைத்துள்ளன. குறிப்பாக அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 10 சதவீதம் வரை சரிந்து, சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சரிவுக்கு பின்னணியாக, அமெரிக்காவில் உருவாகியுள்ள சட்டச் சிக்கல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் நேரடியாக சம்மன் அனுப்ப அனுமதி வழங்குமாறு, அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தையில் பதற்றம் அதிகரித்து, அதானி பங்குகள் சறுக்கத் தொடங்கின.முன்னதாக, சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிமுறைகளில் வழங்க அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா இரு முறை நிராகரித்ததாக SEC நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு அறிவிப்புகளை வழங்க அமெரிக்க அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்தியப் பெருநிறுவனம் ஒன்றைச் சுற்றியுள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான சட்ட வழக்குகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பரபரப்பின் தாக்கமாக,அதானி கிரீன் பங்குகள் 10% சரிந்து, ஒருநாள் வர்த்தகத்தில் ரூ.823 என்ற குறைந்தபட்ச விலையை எட்டின.குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 8% வீழ்ச்சி அடைந்து ரூ.1,936-க்கு சரிந்தன.அதானி போர்ட்ஸ் பங்குகள் 5% குறைந்து ரூ.1,343-ஐ தொட்டன.
அதானி எனர்ஜி பங்குகள் 8% சரிந்து, ஒரு பங்கு ரூ.852-க்கு வீழ்ந்தது.முன்னதாக, அதானி கிரீன் எனர்ஜி உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெற, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் திட்டத்தில் அதானி குழும நிர்வாகிகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் முற்றிலும் ஆதாரமற்றவை எனக் கூறி நிராகரித்துள்ளது.மேலும், தனது நற்பெயரை பாதுகாக்கவும், சட்டபூர்வமாக நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வழக்கும், பங்கு சந்தை அதிர்வும் இணைந்து, இப்போது அதானி குழுமத்தைச் சுற்றி புதிய பரபரப்பு அரசியல்–பொருளாதார அத்தியாயம் தொடங்கியுள்ளது.
English Summary
Stock market turmoil Adani Group loses croresvalue single day