'இ-20'பெட்ரோல் விவகாரம்: 'மாதம் கோடி கணக்கில் சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கிறது'; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள நிதின் கட்கரி..!
Nitin Gadkari responds to criticism by saying he has the brains to earn crores of rupees per month
எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில், அரசியல் ரீதியாக சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து தாக்கிப் பேச பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் முன்னதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார். 'இ-20'பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.
அதாவது, பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால், அது உண்மைக்கு புறம்பானது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த சூழலில், நிதின் கட்கரி மகன் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால் அவர் எத்தனாலை அதிக அளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறித்த குற்றச்சாட்டை நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும் போது பேசியதாவது: எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்ய நான் வழிகாட்டுகிறேன். நான் ஆலோசனைகளை வழங்குகிறேன். ஆனால், மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.
அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை இருக்கிறது. அதோடு ஒரு சாராய ஆலை, மின் உற்பத்தி மையமும் எனக்கு இருக்கிறது.
உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். நான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன், நான் இதையெல்லாம் என் சொந்த சம்பாத்தியத்திற்காகச் செய்யவில்லை, இல்லையெனில் நீங்கள் வேறு ஏதாவது நினைக்கலாம். எனக்கு எனது வருமானம் போதுமானது.

மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறது. எனக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் இயக்கப்படுகின்றன. என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனேவே, 'இ-20' பெட்ரோல் விவகாரத்தில் அனைத்தும் தெளிவாக உள்ளது என்றும், இது, செலவு குறைந்தது; மாசு இல்லாதது என்று கூறியுள்ளார். அத்துடன், வெளி நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கிறதாகவும், .புதைபடிவ எரி பொருட்களை இறக்குமதி செய்ய நம் நாடு பெரும் தொகையை செலவிடுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'இ-20' பெட்ரோல் மூலம், இது கணிசமாக குறையும் என்றும், இவ்வாறு சேமிக்கப்பட்ட பணத்தை நம் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது நல்ல நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் கிடைப்பதால், நம் விவசாயிகள், 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
English Summary
Nitin Gadkari responds to criticism by saying he has the brains to earn crores of rupees per month