வழக்கை தீர்த்து வைக்க தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு: 03 பேர் கைது..!
Case registered against Enforcement Directorate officer who demanded 2 crore bribe from businessman to resolve case
தொழிலதிபர் ஒருவரின் வழக்கை தீர்க்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.கேரள மாநிலம் கொட்டாரக்கராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமார் அவரை விசாரித்துள்ளார். அதனை தொடர்ந்து, தொழிலதிபரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்வதாக சேகர் குமார் மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமாரின் தரகர் எனக்கூறிக் வில்சன் என்பவர், சம்மந்தப்பட்ட தொழிலதிபரை தொடர்பு கொண்டு, வழக்கு விசாரணையை முடிக்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.அத்துடன், அமலாக்கத்துறையின் சம்மன் நகல்களை தொழிலதிபருக்கு அனுப்பிய வில்சன், இந்த முறை ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, தொழிலதிபர் மாநில லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். குறித்த புகாரை உறுதி செய்த அதிகாரிகள், குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரிகளின் அறிவுரையின்படி லஞ்சம் வாங்கிய வில்சனை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அத்துடன், அதேநாளில் தொழிலதிபரை தொடர்பு கொண்டு மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள வங்கிக்கணக்கிற்கு லஞ்சப்பணத்தை செலுத்தும்படி கூறிய ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவரையும் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவர் அளித்த தகவலின்படி கொச்சியைச் சேர்ந்த ஆடிட்டர் ரஞ்சித் வாரியர் என்பவரையும் இன்று அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் தான், தொழிலதிபர் குறித்த தகவல்களை வில்சனிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. பிடிப்பட்ட 03 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் துறை ரீதியிலான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
English Summary
Case registered against Enforcement Directorate officer who demanded 2 crore bribe from businessman to resolve case