படிக்கட்டிலும் மாடியிலும் சடலங்களாக மீட்கப்பட்ட 9 பேர்...! - அலறவைக்கும் டெல்லி தீ விபத்து...!
9 bodies found stairs and attic Shocking Delhi fire
தலைநகர் டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியில் உள்ள விவேக் விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 3 முதல் 4 மணியளவில் எதிர்பாராத விதமாக கொடூரமான தீ விபத்து வெடித்தது. கண நேரத்தில் தீ வேகமாக பரவி, கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியபடி உயிர் தப்பிக்க வெளியேற போராடிய சூழல் உருவானது.

இந்தத் தகவல் கிடைத்தவுடன் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு பாய்ந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் தீவிரமாக போராடியதன் பின்னர், காலை 6 மணியளவில் தீ முழுமையாக அடக்கப்பட்டது.இந்த துயர சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காயமடைந்த இரண்டு பேர் அருகிலுள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து மீட்கப்பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் படிக்கட்டு பகுதியில் இருந்தும், மற்றொருவரின் உடல் முதல் மாடியில் இருந்தும் மீட்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தீயணைப்பு வீரர்களின் துரிதமான செயல்பாட்டினால், கட்டிடத்தின் பால்கனி வழியாக சுமார் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஷாஹ்தாரா டிஜிபி ராஜேந்திர பிரசாத் மீனா கூறியதாவது: அதிகாலை 4 மணியளவில் தகவல் கிடைத்தவுடன் காவலர்களும் தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றோம். பலரை பாதுகாப்பாக மீட்டோம். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஏர் கண்டிஷனர் வெடித்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்; ஆனால் இதை அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் நெருக்கடி மிகுந்த அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து, அப்பகுதி முழுவதையும் அதிர்ச்சியிலும் பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது.
English Summary
9 bodies found stairs and attic Shocking Delhi fire