தமிழகத்திற்கு மத்திய அரசின் புதிய அறிவிப்பு!  மகிழ்ச்சியளிப்பதாக கூறிய டாக்டர் ராமதாஸ்! அதே சமயம்...!   - Seithipunal
Seithipunal


இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை புறநகர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் புதிய இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டுக்கு புதிய சித்த மருத்துவக் கல்லூரி வருவது மகிழ்ச்சியளிக்கக் கூடியது  என்றாலும் கூட, அதை சென்னையில் அமைக்க முடிவு செய்திருப்பது யாருக்கும் பயன் அளிக்காது.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மீது இந்தியா முழுவதும் புதிய ஆர்வமும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. சித்த மருத்துவத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இளம் தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது. இளைய தலைமுறையினரின் ஆர்வத்தை நிறைவேற்ற  அதிக எண்ணிக்கையில் சித்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் விருப்பமும் ஆகும். ஆனால், சித்த மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதற்கான சித்த மருத்துவக் கல்லூரியை தேசிய சித்த நிறுவனத்தில் அமைப்பது எதிர்பார்க்கும் பயன்களை அளிக்காது.

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என்பது மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு இணையான நிறுவனம் ஆகும். முதுநிலை சித்த மருத்துவப் படிப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றுக்குத் தான் அங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் தான் சித்தர்கள் வகுத்துக் கொடுத்த மருத்துவ அடிப்படைகளை வைத்துக் கொண்டு, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உலகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய கொடிய நோய்களுக்கு பக்க விளைவில்லாத மருந்துகளை கண்டறிய முடியும். மாறாக, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், சித்த மருத்துவ நிறுவனத்தின் மனிதவள ஆதாரங்கள் அனைத்தும் புதிய சித்த மருத்துவக் கல்லூரியின் கற்பித்தல் பணிக்கு மட்டுமே செலவிடப்படும். இது தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பெரும் தடையாக அமையும்.

தமிழ்நாட்டில் இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்திருக்கிறது. ஆனால், அத்தகைய கல்லூரி சென்னைக்கு வெளியில் அமைக்கப்பட வேண்டுமே தவிர, சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்படக் கூடாது. 100 மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்ட ஒரு சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமானால் சித்த மருத்துவ பேராசிரியர்கள் 45 பேர், சித்த மருத்துவ வல்லுனர்கள் 10 பேர், நவீன மருத்துவ பேராசிரியர்கள் 12 பேர், பிற பணியாளர்கள் 103 பேர்  என குறைந்தபட்சம் 170 பேர் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் தவிர விடுதி, பண்டகசாலை, சிற்றுண்டிசாலை, சிறுதொழிற்சாலை பிரிவுகள் ஆகியவற்றுக்கான  பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், இளநிலை சித்த மருத்துவக் கல்லூரி தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப் பட்டால், இந்த பணியாளர்களில் ஒருவர் கூட நியமிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே பணியிலிருக்கும்  பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரைக் கொண்டே புதிய கல்லூரியை நடத்துவது தான் சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டம் ஆகும். அதனால், புதிய சித்த மருத்துவக் கல்லூரியில் தரமான கல்வி கிடைக்காது என்பதுடன், ஆராய்ச்சி பணிகளும் கடுமையாக பாதிக்கப்படும்.

மாறாக, சென்னையின் புறநகரில் உள்ள ஏதேனும் ஒரு வட மாவட்டத்தில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், அங்கு புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்;  சித்த மருத்துவ வல்லுனர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதுமட்டுமின்றி, புதிய மருத்துவக் கல்லூரிக்காக புதிய சித்த மருத்துவமனையும் அமைக்கப்படும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சித்த மருத்துவ சேவையும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில்  நடைபெற்று வரும் ஆராய்ச்சிப் பணிகளும் எந்தவித இடையூறுமின்றி தொடருவது உறுதி செய்யப்படும்.

எனவே, தமிழ்நாட்டில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அமைக்கவிருக்கும் புதிய சித்த மருத்துவக் கல்லூரியை  கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏதேனும் ஒரு வட மாவட்டத்தில் அமைக்க  முன்வர எடுக்க வேண்டும். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss welcomes new siddha college to tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->