விசித்திரன் திரைப்படக் குழுவினருக்கு சீமான் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள விசித்திரன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்னுடைய தம்பி பாலா அவர்கள் தயாரித்து, என் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ் அவர்கள் நடித்து வெளிவருகிற "விசித்திரன்" படத்தை பார்த்தேன். தம்பி ஆர்.கே.சுரேஷ் தனது நடிப்பில் மிகவும் தேர்ந்து, உருமாறி, மெருகேறி நடித்துள்ளதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். ஒவ்வொரு உடல்மொழியிலிருந்து, நடையிலிருந்து, முக அசைவிலிருந்து, உரையாடல் உச்சரிப்பிலிருந்து அத்தனையையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.

ஒரு பாட்டு, ஒரு சண்டை, சில நகைச்சுவை காட்சிகள் என்ற வழக்கமான படமாக ‘விசித்திரன்’ இல்லை. இது சற்று வித்தியாசமான படம். படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொரு காட்சியும் எதிர்பார்ப்போடு, விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டே உள்ளது. பொதுவாகப் பெரிய அடிதடி படங்களில்தான் இருக்கை நுனியில் அமர்ந்து பார்ப்பது, கண் இமைக்காமல் பார்ப்பது போன்ற காட்சி அமைவுகள் இருக்கும். ஆனால் அதைவிடவும், இந்தப் படத்தினைப் பார்க்கும்போது ஒரு நொடிகூட நாம் நகர முடியாது.

படத்தின் ஒரு காட்சியைக்கூட நம்மால் கடந்து போக முடியாது. அவ்வளவு ஆழமான பதிவாக உருவாக்கப்பட்டுள்ள விசித்திரன் மிக முக்கியப் படமாக இருக்கும்.

இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்த வெற்றிவேல் மகேந்திரன், திறம்பட படத்தொகுப்பினை செய்த சதிஷ் சூர்யா, கலை இயக்கம் செய்த என்னுடைய மாப்பிள்ளை மாயபாண்டி, இசையமைத்த அன்புத்தம்பி ஜி.வி.பிரகாஷ், பாடல் எழுதியுள்ள என் தம்பி யுகபாரதி எனப் படத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் நான் ரசித்தேன்.

அதிலும் தம்பி யுகபாரதியின் வரிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. தம்பி ஜி.வி.பிரகாஷ் பாடலிலும் சரி, பின்னணி இசையிலும் சரி மிகவும் சிறப்பாக இசை அமைத்துள்ளார். 

இயக்குநர் பத்மகுமார் அவர்களுக்கு என்னுடைய முதன்மையான பாராட்டுக்கள். மலையாளத்தைவிடவும், தமிழில் நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

குறிப்பாக இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்த என்னுடைய அன்புத்தம்பி பாலா, இந்தக் கதையில் நாம் நடிப்போம் என்று நினைத்த தம்பி ஆர் கே சுரேஷ் இருவருக்கும் என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

விசித்திரன் நேர்த்தியான, மிகவும் அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். இப்படியொரு படத்தை எடுக்கப் போகிறார்கள் என்று என்னிடம் கூறியபோதே நான் மிகவும் பாராட்டினேன். படம் மிகவும் சிறப்பாக வரும், துணிந்து செய்யுங்கள் என்று கூறினேன்.

விசித்திரன் படத்தை என்னுடைய தம்பிகள் எல்லாம் சேர்ந்து எடுத்துள்ளார்கள் என்பதில் உள்ளபடியே எனக்கு மட்டற்ற பெருமை. இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். இது போன்ற படைப்புகளைக் கொண்டாட வேண்டியது, கலையை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுடைய கடமை. ஏனென்றால் புகழ்பெற்ற திரைக்கலைஞர்களின் படத்தைத்தான் திரையில் பார்க்க வேண்டும் என்ற மனப்பான்மை இங்கே உள்ளது. அப்படி இல்லாமல் நல்ல படங்கள் எல்லாமே வரவேற்கப்பட வேண்டும்.

பெரிய நட்சத்திரங்கள் நடித்தால்தான் நல்ல படைப்பு என்றில்லை. கதை நன்றாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் திரைக்கதை நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் திரைமொழியில் எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் மிகவும் முதன்மையானது.

இந்தப் படத்தில் அதை மிகவும் நன்றாகவே செய்துள்ளார்கள். இன்று திரைக்கு வரும் ‘விசித்திரன்’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்கிற்கு சென்று கண்டு ரசித்து, மாபெரும் வெற்றிப் படைப்பாக மாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

விசித்திரன் திரைப்படத்தில் பங்காற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படப் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman congratulated visithiran movie team


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->