"வாட்டி வதைக்கும் விலை ஏற்றம்!": தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வு - மக்கள் அவதி!
Severe Price Surge in Essential Commodities Hits Tamil Nadu Hard Public Outrage Grows Over Inflation
தமிழ்நாட்டில் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளதால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
அரிசி மற்றும் சர்க்கரை: மக்களின் அடிப்படை உணவான அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, சர்க்கரையின் விலை ஒரு கிலோ ரூ.40-லிருந்து ரூ.80 வரை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள்: சமையலுக்கு அவசியமான உளுந்தம்பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது; முன்னதாக ரூ.110-க்கு விற்பனையான ஒரு கிலோ உளுந்து தற்போது ரூ.160 ஆக எகிறியுள்ளது. மேலும் துவரம்பருப்பு, மல்லி (தனியா) மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
சமையல் எண்ணெய்: ரூ.160-க்கு விற்கப்பட்ட கடலை எண்ணெய் கிலோவுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.220 ஆக விற்பனை செய்யப்படுகிறது. எளிய குடும்பங்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் விலை ரூ.110-லிருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.
உணவகக் கட்டணங்கள் மற்றும் வணிகப் பாதிப்பு
பொருட்களின் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு (LPG) உருளைகளின் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களிலும் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
சாலையோர உணவகங்கள்: சாமானிய மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் சாலையோர உணவகங்களில் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு தோசையின் விலை தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
உணவக உரிமையாளர்கள் விளக்கம்: எரிவாயு உருளைகள் கிடைக்கப் பெறாத சூழலும், மளிகைப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வுமே உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தக் காரணம் என ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் கண்டனமும் போராட்ட அறிவிப்பும்
மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் தாறுமாறாக எகிறியுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாகக் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாகக் கட்டுப்படுத்தத் தவறினால், மாநில அளவிலும் தேசிய அளவிலும் பிரம்மாண்டப் போராட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றன.
English Summary
Severe Price Surge in Essential Commodities Hits Tamil Nadu Hard Public Outrage Grows Over Inflation