டாலருக்கு மாற்றாக தங்கம்: ரஷ்யாவிடம் இருந்து வரலாறு காணாத அளவில் தங்கம் வாங்கிய சீனா!தங்க மார்க்கெட் காலி!
Gold as an alternative to the dollar China buys unprecedented amounts of gold from Russia The gold market is empty
அமெரிக்க டாலரின் மீது உள்ள சார்பை குறைக்கும் நோக்கில், சீனா 2025 நவம்பர் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து 96.1 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஒரே மாத தங்க ஒப்பந்தம் இதுவாகும். உலகளாவிய அளவிலும், இரண்டு நாடுகளுக்கிடையே ஒரே மாதத்தில் நடைபெற்ற மிகப்பெரிய தங்க வர்த்தகமாக இது பதிவாகியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு 90 கோடி டாலரைத் தாண்டிய தங்க ஏற்றுமதி தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக நடைபெற்றுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரஷ்ய தங்க ஏற்றுமதி 93 கோடி டாலராக இருந்தது. 2025 ஆம் ஆண்டுக்கான சீனா–ரஷ்யா தங்க வர்த்தகத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களே பெரும் பங்கைக் கொண்டுள்ளன. ஜனவரி முதல் நவம்பர் வரை சீனா, ரஷ்யாவிடம் இருந்து மொத்தம் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட சுமார் ஒன்பது மடங்கு அதிகமாகும்.
உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்க அச்சங்கள் மற்றும் நாணய மதிப்பு குறையும் அபாயங்கள் ஆகியவற்றின் பின்னணியில், தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக சீனா தீவிரமாகக் கருதத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாகவே, சீனா தனது மத்திய வங்கித் தங்க கையிருப்புகளை வேகமாக உயர்த்தி வருகிறது. அக்டோபர் 8, 2025 நிலவரப்படி, சீனாவின் தங்க இருப்பு 2,298.5 டன்களாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் தங்க கையிருப்பை தொடர்ந்து அதிகரித்து, 880 டன்களை எட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 3,900 டாலரை எட்டியுள்ள நிலையில், தங்கத்தின் மதிப்பு உலகளாவிய அளவில் மேலும் உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக, இந்தியாவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீன மக்கள் வங்கி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 39.2 டன் தங்கத்தை வாங்கியுள்ளதாகவும், மாதத்திற்கு 2 முதல் 5 டன் வரை தங்கம் கையிருப்பில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாலர் ஆதிக்கத்திலிருந்து விலகி, நடுநிலை மற்றும் நிலையான மதிப்பை கொண்ட சொத்துகளுக்கு மாற வேண்டும் என்பதே சீனாவின் நீண்டகால மூலோபாய நோக்கம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான விதிகளை தளர்த்தவும், பலமுறை பயன்படுத்தக்கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கும் முறையை விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தை எளிதாக வாங்கவும், நகைகளாக மாற்றி விற்பனை செய்யவும் வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், ரஷ்யாவிடம் இருந்து சீனா மேற்கொண்ட இந்த வரலாற்று சிறப்பு மிக்க தங்க கொள்முதல், உலக பொருளாதார சக்திகளின் மாறிவரும் சமன்பாடுகளையும், டாலருக்கு மாற்றான நாணய மற்றும் சொத்து அரசியலையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
English Summary
Gold as an alternative to the dollar China buys unprecedented amounts of gold from Russia The gold market is empty