தங்க மார்க்கெட்டில் பெரிய மாற்றம்! அமெரிக்காவில் இரவோடு இரவாக நடந்த பரபரப்பு..இனி குறைவே குறையாதா?
Big change in the gold market The excitement that took place overnight in the US will it never decrease
அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்ததை காட்டும் புதிய தரவுகள் வெளியானதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரவோடு இரவாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஓரளவு மேம்பட்டாலும், வேலையின்மை விகிதம் எதிர்பார்த்த 4.4 சதவீதத்தை தாண்டி 4.6 சதவீதமாக உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு இரண்டு மாதங்களுக்குப் பிறகு குறைந்த நிலையை எட்டியது.
டாலர் மதிப்பு சரிவடைந்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்வது வழக்கம். அதன்படி சர்வதேச சந்தையில் உடனடி தங்கம் 0.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,310.21 டாலராகவும், அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 4,332.3 டாலராகவும் வர்த்தகம் முடிந்தது. அமெரிக்க அரசுப் பத்திரங்களின் ஈவுத்தொகை குறைந்ததும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்தது.
இந்த தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த நாள் சவரனுக்கு ரூ.1,320 குறைந்திருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
அமெரிக்க மத்திய வங்கி சமீபத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்தது டாலர் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பு தொடரும் பட்சத்தில் டாலர் மேலும் பலவீனமடையும் என்றும், இதனால் தங்கத்தின் விலை உயரும் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ANZ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,400 டாலராகவும், ஜூன் 2026க்குள் 4,600 டாலர் வரை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெடரல் வங்கியின் சுதந்திரம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக தடைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரிக்கும் கடன் சுமை ஆகியவை தங்கத்தில் முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து உயர்வாக வைத்திருக்கும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்க விலையில் ஒரு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ANZ எச்சரித்துள்ளது. சென்னை சந்தையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,983 ஆகவும், 22 காரட் ரூ.11,901 ஆகவும் விற்பனையாகிறது. தற்போதைய உயர்வு நீடிக்காது என்றும், அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் விலை சரிவுக்கான வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Big change in the gold market The excitement that took place overnight in the US will it never decrease