தமிழகத்தில் இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் - சசிகலா பரபரப்பு கோரிக்கை! - Seithipunal
Seithipunal



தமிழ்நாட்டு மக்களுக்கு தீங்கு இழைக்கும் ஷவர்மா போன்ற சுகாதாரமற்ற உணவை, தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று, வி.கே. சசிகலா கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டத்தில் சந்தப்பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்ற 14 வயது சிறுமி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

மேலும், இந்த உணவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவருகிறது. உயிரிழந்த சிறுமி கலையரசியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்து அதனை சாப்பிட்டதால் உயிரிழப்பும், பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் ஊடக வெளிச்சத்திற்கு வராமல் இருப்பதாக தெரியவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள உணவகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், இதுபோன்று தரமற்ற உணவுகளை மக்களுக்கு விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆண்டு கேரளாவில் இதேபோன்று ஒரு மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்து இருக்கிறார். மேலும், இதேபோன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோர்தானில் ஷவர்மா சாப்பிட்ட 800 நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள மாணவி உயிரிழந்து போது அதற்கான காரணத்தை ஆய்வு செய்ததில், மாணவி சாப்பிட்ட ஷவர்மா மாதிரிகளில் ஷிகெல்லா, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருந்தது என்பது நிரூபணமானது.
நன்றாக வேகவைக்கப்படாத அல்லது முந்தைய நாள் இறைச்சி, விரைவில் கெட்டுப்போகக்கூடிய மயோனைஸ், அழுகிய காய்கறிகள், காலாவதியான சாஸ்கள் ஆகியவற்றின் மூலமாக இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இறைச்சியை நீண்ட நேரம் வேகவைக்காததாலும், நீண்ட நேரம் மீண்டும், மீண்டும் சூடுபடுத்துவதாலும், ஷவர்மா தயாரிக்கும் இடங்களில் உள்ள சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களாலும் உணவில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

அவ்வாறு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கெட்டுப்போன உணவுகளை அறியாமல் சாப்பிடும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுவதாகவும், இதற்கு ஷிகெல்லா பாக்டீரியாக்களே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வயிற்றுப்போக்குடன் குடல் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்வை அதிகமாக வெளியேறுதல், தலைவலி, செரிமான பிரச்னைகள் ஏற்படுகிறது.மேலும், நரம்புகளில் பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், கர்ப்பிணிகள், ஐந்து வயதிற்குட்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் இது போன்ற உணவை உட்கொள்ளும்போது அவர்களுக்கு அது மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடுகிறது.

உணவுகளை அதிக வெப்பநிலையில் முழுவதுமாக வேகவைத்து சமைக்க வேண்டும். உணவு, தண்ணீர், சமையல் பொருட்கள் தரமானதாக சுத்தமானதாக இருக்க வேண்டும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்கிறோமா என்பதை ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் உறுதி செய்துகொள்ளவேண்டும். மேலும், ஷவர்மா போன்ற சுகாதாரம் குறைவான உணவுகளை, முழுமையாக வேகவைக்கப்படாத உணவுகளை உண்ணுவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமான உணவு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிசெய்திட வேண்டும். 

குறிப்பாக நமது வாழ்க்கை முறை, உணவு முறை, இங்குள்ள சீதோஷண நிலை போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஷவர்மா போன்ற சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு முழுவதும் முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். 

இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்திருந்தால் ஷவர்மா போன்ற சுகாதாரமற்ற உணவுகளை தடை செய்திருப்பார்கள். மக்களுக்கு சுத்தமான தண்ணீர், சுகாதாரமான உணவு, மாசற்ற காற்று ஆகியன கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருப்போம். 

இது போன்று தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கெல்லாம் நேரம் செலவிட திமுகவினர் என்றைக்கும் முன் வருவது இல்லை. அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதும் இல்லை. இருப்பினும் வாக்களித்த மக்களை கொஞ்சமாவது நினைத்து பார்த்து மக்கள் பாதுகாப்பான சுகாதாரத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்" என தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Say Ban Shawarma


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->