வங்கிக்கடன் தள்ளுபடி.. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து... பள்ளிக் கல்விக்கு ரூ.50,000 கோடி.. அடுத்தடுத்த அதிரடிகளுக்கு வழிவிடுமா தமிழகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, உழவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோக்குடன்  கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கையையும், 2008- 09 ஆம் ஆண்டு முதல் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் மக்கள் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வருகிறது.

இதுவரை 15 பொது நிழல் நிதிநிலை அறிக்கைகளையும், 10 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளையும் பா.ம.க. வெளியிட்டுள்ளது.

பா.ம.க. வெளியிடும் நிழல் நிதிநிலை அறிக்கைகள் சான்றோர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

2018&-19 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை கடந்த  ஞாயிற்றுக்கிழமை (11.02.2018) கோவையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை கடந்த சனிக்கிழமை (17.02.2018) அன்று சென்னையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸால் வெளியிடப்பட்டது.

அதில்  94 தலைப்புகளில் 417 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழக அரசு
செயல்படுத்தும் பட்சத்தில், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்பது உறுதி என்று ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

பாமக வெளியிடும் நிழல் நிதிநிலை அறிக்கை  இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது, அதில் சுட்டிகாட்டப்பட்ட கருதுகோள்களை அண்டை மாநிலங்கள் எடுத்துக்கொண்டு தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் பாமகவால் வெளியிடப்பட்ட பொது நிழல் நிதிநிலை அறிக்கை  அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது.

நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய சாராம்சங்கள்:

அண்ணாமலை பல்கலைக்கு ரூ.1000 கோடி:

54. கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உதவும் வகையில் ஒருமுறை நிதி உதவியாக ரூ.1,000 கோடி வழங்கப்படுகிறது. 

55. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கை 5456 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அண்ணாமலை பல்கலைக் கழக நிதிநெருக்கடிக்கும், கூடுதல் பணியாளர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கும் முடிவுகட்டப்படும். 

 

மின் கட்டணம் குறைப்பு

56. தமிழ்நாட்டில் மின் கட்டணம் 10% குறைக்கப்படும். இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 25% குறையும்.

 

பேருந்துக்கட்டண உயர்வு ரத்து

57. தமிழ்நாட்டில் அண்மையில் உயர்த்தப்பட்ட ரூ.3,500 கோடி பேருந்து கட்டணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது. 

58. சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 2018&19 ஆம் ஆண்டில் 5,000ஆக உயர்த்தப்படும். சென்னை மாநகரப் பேருந்துகளில், ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணமில்லாப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அன்று முதல் மாநகரப் பேருந்துகளில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

59. மத்திய அரசுடன் பேசி தணிக்கை செய்வதன் மூலம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். முதலீடு ஈட்டப்பட்ட சுங்கச் சாவடிகளில் 40% மட்டுமே பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

மெட்ரோ ரயில் திட்டம்

60. சென்னையில் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும். 

61. இரண்டாம் கட்டமாக 105 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.85,047 கோடி செலவில் பெருநகர தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்கான திட்டப் பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும். 

62. சென்னையில் நீர்வழிப் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுக் கூறுகள் நடத்தப்படும். 

63. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 500 இடங்களில் 10,000 மிதிவண்டிகளுடன் மிதிவண்டி போக்குவரத்துத் திட்டம் தொடங்கப்படும். 

 

தொடர்வண்டித் திட்டங்கள்

64. தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து தொடர் வண்டித்திட்டங்களையும் நிறைவேற்றி முடிக்க ரூ.20,064 கோடி தேவை. தொடர்வண்டித்துறை அமைச்சகத்தின் யோசனையை ஏற்று இத்திட்டங்களை கூட்டு முயற்சியில் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

65. அதன் படி, இத்திட்டத்திற்கான செலவில் பாதியை, அதாவது ரூ.1,000 கோடியை தொடர்வண்டித் திட்டங்களுக்கு அடுத்த ஆண்டுகளில் சமதவணைகளாக தமிழக அரசு வழங்கும்.

 

நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம்

66. 2018&19 ஆம் ஆண்டு முதல் 2021&22 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை இப்போதுள்ள 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து  50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் இலக்கு மற்றும் நோக்கம் ஆகும்.

67. உழவர்கள் கடன் சுமையில் சிக்குவதை தவிர்க்கவும், வேளாண்மையை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், சிறு, குறு உழவர்களுக்கு மூலதன மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது. 

68. மூலதன மானியத் திட்டத்தின்படி ஒவ்வொரு சிறு, குறு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு, ஒரு பருவத்திற்கு ரூ.5,000 வீதம் ஆண்டுக்கு இரு பருவங்களுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும். இதை அரசுக்கு திரும்பச் செலுத்தத் தேவையில்லை-. இதன் மூலம் உழவர்களுக்கு உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ம.க.வின் வாக்குறுதி நிறைவேற்றப்படும். 

69. 2018&19 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.12,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.

70. உழவர்களின் நலன் கருதி பயிர்க்கடனுக்கு 10% வட்டி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படும். அதன்படி ரூ.1 லட்சம் கடன் வாங்குபவர்கள் ரூ.90,000 திருப்பிச் செலுத்தினால் போதும்.

 

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

71. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு  வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

 

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

72. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

73. வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். 

74. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

 

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்

75. தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.  இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். 

76. 2018&19 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.4,970ஆக நிர்ணயிக்கப்படும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வேளாண் விலை பொருள் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்கள் கரும்பு வழங்கமுடியும். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 30 நாட்களில் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்களின் வங்கிக் கணக்கில் கொள்முதல் விலை வரவு வைக்கப்படும். 

77. 2018&19 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,811 என நிர்ணயிக்கப்படும். 

 

வேளாண் துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

78. தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படவிருக்கும் நீர்ப்பாசன பெருந்திட்டங்கள், வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கூட்டுறவு உணவகங்கள், நீரா விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வேலை தேடி நகரப்பகுதிகளுக்கு இடம்பெயர்வது தவிர்க்கப்படும். 

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

79. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசின் அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. அத்திட்டத்திற்கு நெடுவாசல் மக்களும், உழவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. 

80. தமிழ்நாட்டில் எண்ணூர் & நாகப்பட்டினம், நாகப்பட்டினம் & மதுரை, நாகப்பட்டினம் & தூத்துக்குடி, திருவள்ளூர் & பெங்களூர் ஆகிய 4 வழித்தடங்களில் 1,175 கிலோமீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால்  விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

81. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சேலம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டமும் வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்திட்டத்தின் பாதையையும் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.  

 

மணல் குவாரிகள் மூடப்படும்

82. உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, மே மாதம் 29ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படவேண்டும்.  அதன்படி பிப்ரவரி மாதம் முதல்  மே மாதம் வரை ஒவ்வொரு மாதமும் தலா 12 மணல் குவாரிகள் மூடப்படும். ஜூன் மாதம் முதல் மணல் குவாரிகள் இருக்காது. 

 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

83. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும். 

84. இந்த மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களும், கனிமங்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுப்பதற்காக வேளாண் விளை நிலங்களை நாசமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும்.

 

பள்ளி கல்விக்கு தனி நிதியம்

85. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும். 

86. இதற்கு “தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி வளர்ச்சி நிதி” என பெயரிடப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த நிதிக்கு நன்கொடை வழங்கலாம். பள்ளிகள் சீரமைப்பு, தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கல்வி வளர்ச்சிப் பணிகளுக்காக இந்த நிதி செலவிடப்படும்.

 

பள்ளிக் கல்விக்கு ரூ.50,000 கோடி

87. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டம் 2018&19 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். 

88. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 10 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 500 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும். 

89. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.30,000 செலவிடப்படும். 

90. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

91. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

 

திறன்சார் கல்வி

92. பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11&ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.

93. மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாகச் சென்றுவர வசதியாக, “மாணவர்கள் மட்டும்” பேருந்துகள் இயக்கப்படும்.

94. அனைத்து மாவட்டங்களிலும் முறையே ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டில் திண்டுக்கல், கடலூர், கரூர், அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். 

95. நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் 2018&19 ஆம் ஆண்டில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும். 

96. தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50 விழுக்காடு இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

97. 2018 & 2019 ஆம் ஆண்டில் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.13,500 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

 

புதிய கல்வி நிறுவனங்கள்

98. சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாக (Centre of  Excellence) தரம் உயர்த்தப்படும். 

99. தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

100. சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஓராண்டிற்குள் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.

101. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி.க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்   அமைக்கப்படும். 

102. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.

103. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2018&19ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள் தொடங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk-shadow-budget-for-tamilnadu-2018-points-part 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->