நம்பிக்கையோடு இருங்கள்! சேறும், சோறும் தான் முக்கியம்! புதிய பாதையை தொடரும் அன்புமணி! - Seithipunal
Seithipunal


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக கம்மாபுரம், புவனகிரி ஒன்றியங்களில் 26 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 40 கிராமங்களில் 12,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த போவதாக என்எல்சி நிர்வாகம் அறிவித்தது. 

இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று நெய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மக்களிடையே இந்த திட்டம் குறித்தும்  அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து விளக்கமாக பேசினார். 

மேலும் இந்த திட்டம் ஏன் செயல்படுத்தபடக்கூடாது என்பதையும் குறிப்பிட்டு பல தகவல்களை மக்களின் மத்தியில் எடுத்து வைத்தார். நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பகுதியில் இருந்த முன்னோர்கள் 1956 ஆம் ஆண்டு நிறுவனம் தொடங்கிய போது, நமக்கு ஒரு நிறுவனம் வருகிறது, நமக்கெல்லாம் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற எண்ணத்தில் நிலங்களை அப்போது கொடுத்து விட்டனர். ஆனால் இங்கே நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலையும் இல்லை, அவர்களுக்கான வாழ்வாதாரமும் இல்லை. சொந்த நாட்டிலேயே தன்னுடைய நிலங்களை எல்லாம் விட்டு விட்டு அகதிகளாக வேறு ஒரு கிராமங்களுக்கு சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு முன்பு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பத்தாயிரம் ஏக்கர் நிலங்களை இதுவரை பயன்படுத்தப்படாமலேயே அந்த நிறுவனம் வைத்து இருக்கிறது. அதுவும் சுமார் 33 வருடங்களாக பயன்படுத்த படாமல் உள்ளது. தற்பொழுது  மூன்றாவது சுரங்கத்திற்காக 12250 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தபடுவதாக  என்எல்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிலக்கரி வெட்டி எடுத்தாலே இன்னும் 20 வருடங்களுக்கு மின் உற்பத்தி செய்ய முடியும் எனும் போது,  தற்போது இவர்கள் யாருக்காக கையகப்படுத்துகிறார்கள்? யாருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க இவர்கள் கையகப்படுத்துகிறார்கள் என அன்புமணி கேள்வி எழுப்பினார். 

ஒரு திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தினால் அந்த நிலங்களை  ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தவில்லை என்றால் பிறகு அந்த நிலங்களை  விவசாயிகளுக்கு திருப்பி அளித்து விட வேண்டும் என்பது தற்பொழுது உள்ள அரசு சட்டமாகும். அதனால் ஏற்கனவே உள்ள நிலங்களையும் என்எல்சி நிறுவனம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றார். 

நமக்கு என்எல்சி மூன்றாவது சுரங்கம் என்பது தேவையே இல்லை, நமக்கு தேவை சேறும் சோறும் தான் மேலும் இங்கே உள்ளவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டு நிறுவனத்தை தொடங்கி விட்டு வடநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு வேலை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாகத்தின் உள்ளே செல்ல வேண்டுமென்றால் இந்தி தெரிந்தால் மட்டும் தான் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்க கூடிய சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. இந்த மண்ணானது அனைத்து விதமான பயிர்களும் விளையக்கூடிய மண்ணாகும் காய்கறி வகைகள் ஆகட்டும், பூக்கள் ஆகட்டும், மரவகைகள் ஆகட்டும் அனைத்தும் செழித்து வளரக்கூடிய எப்பொழுதும் லாபம் தரக்கூடிய வளமான மண்ணாகும். 

இம்மண்ணில் சராசரியாக 20 அடியிலிருந்த நிலத்தடி நீர் மட்டம் ஆனது தற்போது இந்த நிலக்கரி சுரங்கத்தினால் 800 அடி, 600 அடி, 400 அடி என்று இடத்திற்கு ஏற்றவாறு மிகவும் கீழே சென்று விட்டது.  மேலும் இங்கே வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி என்பது தரமான நிலக்கரியே இல்லை. பழுப்பு நிலக்கரி என்பது நிலக்கரியில் உள்ள மற்றொரு வகையான நிலக்கரி. இதனை எரிக்கும் போது அதிகப்படியான கரியமில வாயு வெளியேறுகிறது. 

ஆனால் இந்திய அரசாங்கமோ கரியமில வாயு வெளியீட்டு அளவினை குறைக்கும் வகையில்  போலந்து நாட்டில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டு 2020 முதல் கரியமிலவாயு வெளியிடும் எரிபொருட்களின் பயன்பாட்டினை  குறைத்து, 2030இல் கரியமில வாயுவை பாதி அளவு கட்டுப்படுத்தவும், 2050க்குள் முழு அளவு கட்டுப்படுத்திட வேண்டும் எனவும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 196 நாடுகளில் ஒரு நாடு என்பதனை மறந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இது ஐநாவில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் இதனால் நாம் ஐநா வரை சென்று முறையிடலாம். 

இந்த நிலக்கரியை தொடர்ந்து எரிப்பதால் உலகம் வெப்படைகிறது புவியினுடைய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலிருந்து 15 டிகிரி செல்சியஸ் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. இதனால்தான் புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழகத்தில் தானே புயல், 2015 பெருவெள்ளம், வரதா புயல், ஒக்கி புயல், கஜா புயல் என  அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகிறது. 

தற்பொழுது இங்கே மகாலட்சுமி என்ற ஒரு தனியார் நிறுவனம் ஆந்திராவிலிருந்து நிலக்கரி வெட்டுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 10 டன் நிலக்கரி வெட்டுவதற்கு அனுமதி என்றால் 100 டன் அளவிற்கு மட்டும் அளவுக்கு ராஜஸ்த இயந்திரங்களை இங்கே இறக்குமதி செய்து உள்ளது. இதனை வைத்துக்கொண்டு உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள தனியார் நிறுவனங்களே லாபங்களை ஈட்டி வருகின்றன. 

வருடத்திற்கு சுமார் 3,200 கோடி ரூபாய் லாபம் பார்க்கும் இந்த நிறுவனமானது 2015 ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின் போது,  இந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரியதாக எதுவும் கொடுத்துவிடவில்லை. எடுத்தவுடனே ஒரு கோடி ரூபாயை அறிவித்த என்எல்சி நிர்வாகம் பின் பாமகவின் போராட்டத்தின் காரணமாக 5 கோடி ரூபாயை அறிவித்தது. மேலும் ராஜஸ்த மோட்டார்களை கொண்டு அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி வெள்ளத்தோடு வெள்ளமாக 1000 பேரை கொன்று குவித்தது. 

நாம் என்எல்சி நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் தொடங்கக்கூடாது என்று போராடும் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறோம். இந்த திட்டத்திற்கு மாற்று வழியாக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள 10 ஆயிரம் ஏக்கரில் சோலார் மின் தயாரிப்பு ஊக்கப்படுத்தினால் 2000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது நிலக்கரியை எரிப்பதனால் 2900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் போது நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை, நிலத்தடி நீரும் குறையப்போவதில்லை, பாதிக்கப்படப்போவதுமில்லை, காற்று மாசுபட போவதில்லை. இதனை செய்ய நிர்வாகம் முன்வருமா?

நீங்கள் எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருங்கள். நமது மருத்துவர் அய்யா இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. இதனைவிட பாதி அளவு விவசாய நிலங்கள் மட்டுமே பாதிக்கக்கூடிய சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்காக வழக்கு போட்டுள்ளேன். 12 ஆயிரத்து 250 ஏக்கர் கண்டிப்பாக நான் காப்பாற்றிக் கொடுப்பேன். விவசாயத்தை சிதைத்து, சோறுபோடும் நிலங்களை அழித்து ஒரு வளர்ச்சித் திட்டம் தேவை என்றால் நிச்சயமாக எனக்கு அது தேவையே இல்லை.  குடிநீர் இல்லாமல், வாழ்வாதாரம் இல்லாமல் மக்கள் அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்வதென்பது எனக்கு தேவையே கிடையாது.  காற்று மாசுபாடு அதனால் ஏற்படக்கூடிய நோய்கள் என மக்கள் துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு ஒரு வளர்ச்சி திட்டம் என்பது தேவையில்லை. 

இங்கே வேலைவாய்ப்பு என்று பார்த்தால் ஒரு காலத்தில் 20 ஆயிரம் பணியாளர்கள் இங்கே அரசு ஊழியர்களாக இருந்தார்கள். தற்போது வெறும் 9 ஆயிரத்து 500 பேர் மட்டுமே அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் வடநாட்டவர்களாக இருக்கிறார்கள். சுமார்  10,300 பேர் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கிறார்கள். அவர்களை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் பணி நியமனம் செய்ய வேண்டும் அரசு ஊழியராக்க வேண்டும் என அறிவித்த பிறகும் இதுவரை ஏனோ பெயருக்கு என்று சிலரை மட்டும் அரசு ஊழியர்களாக என்எல்சி நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது. 

இந்த பிரச்சனை என்பது பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சினை கிடையாது இது மக்களுடைய பிரச்சினை பொதுப்பிரச்சினை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.  இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 57 ஆயிரம் ஏக்கரில்  தொடங்கப்பட இருந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தினை பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் பிறகு மத்திய அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல இந்தத் திட்டத்தையும் நாம் கை கைவிடும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்பதை உறுதி கூறுகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 

பெட்ரோ கெமிக்கல் மண்டலம், ஹைட்ரோ கார்பன் திட்டம், ONGC எண்ணெய் கிணறுகள், சென்னை சேலம் எட்டு வழி சாலை, விவசாய நிலங்கள் வழிய மின்கோபுரம் அமைத்தல், கெயில் குழாய் பதித்தல் என விவசாய நிலங்களை பாதிக்கும் அத்தனை திட்டங்களையும் எதிர்க்கும் ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணியும் இருக்கிறார்கள் என்பதனை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அன்புமணி சொன்னது போல வாழ்வதற்கு சேறும் அதில் விளையும் சோறும் தானே முக்கியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk protest against nlc third mine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->