மூன்றாவது நாளாக இடைவிடாத மழை! - ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பொதுமக்கள் அவதி...!
Non stop rain for third day Public suffering throughout Ramanathapuram district
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வானம் திறந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து, வாழ்வை மந்தமாக்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழையில் நனைந்து வருகிறது. ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்தது. இடையிடையே பெய்த மிதமான முதல் கனமழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

பஸ் நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமம் அனுபவித்தனர். தீபாவளி விற்பனையும் மழையால் பாதிக்கப்பட்டது.நகராட்சி தலைவர் கார்மேகம் அறிவுறுத்தலின்படி, ஊழியர்கள் மோட்டார் எந்திரம் மூலம் தேங்கிய தண்ணீரை அகற்றினர்.
இதேபோல் முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து, பனைமர உயரத்தில் அலைகள் எழுந்தன. கடல் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால், பல மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.ராமேசுவரத்தில் மழை இடைவிடாமல் பெய்ததால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
மேலும் பலத்த காற்றால் மணல் சாலைகளில் பரவி, வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் (மில்லிமீட்டரில்):
தீர்த்தண்ட தானம் – 83.20
மண்டபம் – 55.10
ஆர்.எஸ். மங்கலம் – 52
பரமக்குடி – 51.80
தங்கச்சிமடம் – 41.50
தொண்டி – 34
ராமநாதபுரம் – 30
முதுகுளத்தூர் – 29.70
பாம்பன் – 21.50
கமுதி – 21
திருவாடானை – 16
வட்டாணம் – 11.80
மொத்தம்: 519 மில்லிமீட்டர் மழை பதிவாகி, ராமநாதபுரம் முழுவதும் பருவமழையின் ஆட்டம் துவங்கிவிட்டது
English Summary
Non stop rain for third day Public suffering throughout Ramanathapuram district