“தனித் தொகுதி” என்றால் என்ன? தனித் தொகுதி வரலாறும், தமிழ்நாட்டில் அதன் நிலையும்! ஓர் சிறப்பு பார்வை!
separate constituency The history of separate constituencies and their status in Tamil Nadu A special look
தேர்தல் காலங்களில் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான வார்த்தைகளில் ஒன்று “தனித் தொகுதி”. இதன் அர்த்தம், அதன் வரலாறு மற்றும் தமிழ்நாட்டில் அதன் தற்போதைய நிலை குறித்து பார்க்கலாம்.
“பொதுத் தொகுதி” என்பது அனைத்து சமூகத்தினரும் போட்டியிடக்கூடிய தொகுதி. ஆனால் “தனித் தொகுதி” என்பது குறிப்பிட்ட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. இதில் முக்கியமாக பட்டியலின (SC) மற்றும் பழங்குடியினர் (ST) சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த முறை நடைமுறையில் உள்ளது.
தனித் தொகுதிகளில் வேட்பாளராக நிற்க, அந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் வாக்களிப்பதில் எந்தத் தடையும் இல்லை — அனைத்து சாதி, மத மக்களும் வாக்களிக்கலாம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 44 தொகுதிகள் பட்டியலினருக்காகவும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 தனித் தொகுதிகள் உள்ளன.
இந்த முறையின் பின்னால் பெரிய வரலாறு உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1909 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மை மக்களுக்கு தனி பிரதிநிதித்துவம் வழங்கும் முயற்சிகள் தொடங்கின. பின்னர் 1932 ஆம் ஆண்டு காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு “பூனா ஒப்பந்தம்” உருவானது. அதன்படி தனி வாக்காளர் முறை ரத்து செய்யப்பட்டு, “தனித் தொகுதி” முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் வேட்பாளர் மட்டும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஆனால் வாக்களிப்பது அனைத்து மக்களும் சேர்ந்து செய்வது என்ற சமநிலை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நடைமுறைக்கு இந்திய அரசியலமைப்பில் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 330 மற்றும் 332 மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
இன்றைய சூழலில் “தனித் தொகுதி” என்ற சொல்லே மாற்றப்பட வேண்டுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இருப்பினும், சமூக நீதி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முக்கியமான அமைப்பாக இந்த முறை தொடர்கிறது.
English Summary
separate constituency The history of separate constituencies and their status in Tamil Nadu A special look